எனை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்


தனுஷ் கல்லூரி மாணவர். சென்னையில் தங்கி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். தனுஷ் படிக்கும் கல்லூரியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. அத்திரைப்படத்தில் நாயகியாக நடிப்பவர் தான் படத்தின் நாயகி மேகா ஆகாஷ்.

மேகா ஆகாஷை பார்த்ததும் தனுஷ் காதலில் விழுகிறார். மேகா ஆகாசும் தனுஷை காதலிக்கிறார். இரண்டு மாதங்கள் கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற இருவரும் ஜாலியாக காதலித்து வருகின்றனர்.

அப்போது மேகா ஆகாஷ் தான் ஒரு அனாதை என்றும், இயக்குநர் ஆதரவில்தான் சிறுவயதில் இருந்து வளர்ந்து வருவதாகவும் தனுஷிடம் கூறுகிறார். மேலும் இயக்குநரின் வற்புறுத்தலினால் தான் இப்படத்தில் நடிப்பதாகவும் தன்னைப் பற்றிய உண்மையைக் கூறுகிறார்.

உடனே மேகா ஆகாஷை தனுஷ் யாருக்கும் தெரியாமல் அவருடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார். சில நாட்கள் கடந்த பின் மேகா ஆகாஷை தேடி அந்த படத்தின் இயக்குனர் தனுஷ் வீட்டிற்கு செல்கிறார்.

அப்போது மேகா ஆகாஷ் 5 நாட்கள் கழித்து சென்னையில் வந்து தன்னைப் பார்க்கும்படி கூறிவிட்டு இயக்குநருடன் சென்னை செல்கிறார். தனுசும் 5 நாட்கள் கழித்து மேகா ஆகாஷைப் பார்க்க சென்னை செல்கிறார். ஆனால் எங்கு தேடியும் மேகா ஆகாஷைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் தனது ஊருக்கே திரும்புகிறார் தனுஷ். மேகா ஆகாஷிடமிருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில் 4 ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

4 ஆண்டுகளுக்கு பின் திடீரென தனுஷுக்கு போன் செய்யும் மேகா ஆகாஷ், தான் மும்பையில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருப்பதாகவும், தன்னை வந்து காப்பாற்றுமாறும் கூறுகிறார். இதன் பின்னர் தனுஷ் மும்பை சென்று மேகா ஆகாஷை காப்பாற்றினாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

தனுஷ், வழக்கம் போல் தனது அசத்தலான நடிப்பால் கவர்கிறார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார். மேகா ஆகாஷ் தனது அழகால் கவர்கிறார். தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த வந்த சசிகுமார் இந்த படத்தில் ஸ்டைலாக வந்து ஆங்கிலத்தில் பேசுகிறார். சிறிது நேரமே வந்தாலும் படத்திற்கு திருப்பு முனையாக அமைந்துள்ள இவரது கதாபாத்திரம்.

கவுதம் மேனன் இக்கதையை கையாண்ட விதம் சிறப்பு. காதல் கதையை சொல்வதில் கைதேர்ந்த கவுதம் மேனன், நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டே போகிறார். வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. தர்புகா சிவாவின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்த நிலையில், விஷுவல் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. பின்னணி இசையிலும் அசத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் கவுதம் மேனன் மீண்டும் தன்னை நிருபித்துள்ளார்.