O2 ; திரை விமர்சனம்


தன் மகனின் உயிரைக் காப்பாற்ற துடிக்கும் தாயுடன் சேர்த்து சூழலியல் சார்ந்த கருத்தை சொல்லும் படம் தான் O2.

கோவையில் இருந்து கொச்சி செல்லும் பேருந்து எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்கடியில் புதைந்து விடுகிறது. அதில் இருக்கும் பதினோரு பேரும் தப்பித்தார்களா இல்லையா என்பதை விறுவிறுப்புடன் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ்.

நுரையீரல் பாதிப்பால் காஸ் சிலிண்டரின் உதவியின்றி சுவாசிக்க முடியாமால் தவிக்கும் மகனை மேல் சிகிச்சைக்காக கொச்சின் அழைத்தும் செல்லும் நயன்தாரா, தன் காதலியின் தந்தைக்கு தெரியாமல் அவளை அழைத்து செல்ல திட்டமிடும் காதலன், போதைபொருள் கடத்தி செல்லும் காவலர், இழந்த செல்வாக்கை மீட்க செல்லும் அரசியல்வாதி அவருக்கு துணையாக அவரது பி.ஏ, செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து விடுதலையாகும் நபர் உள்ளிட்டவர்கள் அந்த பேருந்தில் பயணிக்கின்றனர்.

மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து மன்னுக்கடியில் சிக்கிகொள்கிறது. 11 நபர்கள், 10 மணி நேரம் மட்டுமே அங்கு இருக்கும் ஆக்சிஜனை கொண்டு உயிர் வாழ முடியும் என்ற சூழல். யார் பிழைப்பார்? என்ன நடக்குது என்பதை விறுவிறுப்புடன் கூடிய திரைக்கதை மூலம் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

ஒட்டுமொத்த படத்திற்கும் அச்சாணியாக நயன்தாரா. தன் மகனை காப்பது, தைரியமான பேச்சு, குற்ற உணர்ச்சி, பாசம், பயம் என ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் நயன்தாரா. வீரா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் யூட்யுப் புகழ் ரித்விக் அசத்தியிருக்கிறார். ரித்விக்கிற்கு இது முதல் படம், இருந்தாலும் படத்திற்கு தேவையான மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் பரத் நீலகண்டன் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆடுகளம் முருகதாஸ், ஆர்.என்.ஆர்.மனோகர், லேனா, ஷா ரா, உள்ளிட்டோரின் நடிப்பு படத்திற்கு பலம்.

இயற்கையை மனிதன் வேட்டையாடினால், அந்த இயற்கை மனிதனை வேட்டையாடும் என்னும் கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ். இயற்கைக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக இயற்கை மீண்டும் உங்களுக்கு கைமாறு செய்யும் என்ற சூழலியல் பிரச்சினையை பாடம் எடுக்காமல் காட்சிகளால் கடத்திய விதம் கவனம் பெறுகிறது.

ஒரே பேருந்துக்குள் நடக்கும் கதை, ஆனால் முடிந்தவரை தனது கேமராவால் வித்தியாசம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், கலை இயக்குனர் சதீஷின் உழைப்பும் படத்திற்கு பலம்.

மொத்தத்தில் O2 அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.