குஷி ; விமர்சனம்


இதுநாள் வரை வெளியான படங்களில் காதலுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தது என்றால் இந்த படத்தில் இன்னொரு கோணத்தில் காதல் பிரச்சினையை அணுகி உள்ளார்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு வேலை கிடைக்கிறது. சென்னையில் கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணவேண்டும் என வாண்டட் ஆக காஷ்மீருக்கு போஸ்டிங் வாங்கிக்கொண்டு கனவுடன் செல்கிறார். ஆனால் சென்ற முதல்நாளே ஏற்படும் கசப்பான அனுபவங்கள் ஏண்டா இங்கே வந்தோம் என அவரை கடுப்பேற்றுகின்றன.

ஆனால் எதிர்பாராத விதமாக சமந்தாவை அங்கே சந்திக்கும் விஜய் தேவரகொண்டா முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார். அவர் முஸ்லீம் என நினைத்து காதலிக்க துவங்கும் அவருக்கு பின்னர் அவர் இந்து பிராமணப் பெண் என தெரிய வருகிறது. அதைவிட முக்கியமான விஷயம் அவர் ஆச்சார அனுஷ்டானங்களை தீர்க்கமாக கடைபிடிக்கும் முரளி சர்மாவின் மகள். அதேசமயம் விஜய் தேவரகொண்டாவின் தந்தையோ கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக கூட்டத்திற்கு தலைவர்.

காதலுக்கு வேறு எந்த எதிர்ப்பு இல்லை என்றாலும் இவர்களது கொள்கை தடையாக நிற்கிறது. குறிப்பாக விஜய்யின் ஜாதகத்திற்கு இவர்களால் நிம்மதியாக குடும்பம் நடத்த முடியாது என்கிறார் சமந்தாவின் தந்தை. அந்த வகையில் காதலர்கள் இருவரும் வீட்டை எதிர்த்து வெளியேறி திருமணம் செய்கின்றனர்.

ஒரு வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகளும் சிறுசிறு பிரச்சனைகளும் தோன்றுகின்றன. குழந்தை பாக்கியமும் தங்கவில்லை. இதற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார் சமந்தா. கொள்கை காரணமாக வீம்பு காட்டுகிறார் விஜய் தேவரகொண்டா. இது இவர்களின் பிரிவுக்கே அழைத்துச் செல்கிறது. கணவன் மனைவி பிரிந்தார்களா ? இல்லை காதல் வென்றதா ? என்பது மீதிக்கதை

தோல்விக்கு பிறகு ஒரு வெற்றி என்கிற கணக்கில் விஜய் தேவரகொண்டாவுக்கும் சமந்தாவுக்கும் ஒரு புத்துணர்ச்சியான வெற்றியை இந்த படம் கொடுத்திருக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை வழக்கமான ஒரு காதல் கதையாக பயணித்து எதிர்பாராத விதமாக யு டர்ன் எடுப்பதிலும் இந்த படம் சரியான ரூட்டில் பயணித்திருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் ஜாடிக்கேத்த மூடியாக ஜமாய்க்கிறார்கள். அதிலும் ரொமான்ஸ் காட்சிகள் ரொம்பவே நெருக்கம். இருவரும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம். படம் முழுவதும் நம்மை உற்சாகமாக பயணிக்க வைப்பதும் இந்த காதல் தான்

அதேபோல காதலர்களின் பெற்றோர்களாக குறிப்பாக சமந்தாவின் தந்தையாக நடித்துள்ள முரளி சர்மா, விஜய் தேவரகொண்டாவின் தந்தையாக நடித்துள்ள சச்சின் கடேகர் இருவருமே விடாக்கண்டன் கொடாக்கண்டனாக படம் முழுவதும் சீறுகிறார்கள், யார் பெரியவர் என்கிற ஈகோ யுத்தமாக ஒரு பக்கம் தெரிந்தாலும் இறுதியில் இருவரும் இணைந்து சமரசம் பரிமாறிக் கொள்ளும் இடம் சபாஷ் சொல்ல வைக்கிறது

காதலர்கள் வீட்டை விட்டு ஓடி வந்தால் அவர்களுக்கு தங்களது வலி நிறைந்த கதையை சொல்லி பக்குவப்படுத்துவதற்கு ஒரு அனுபவப்பட்ட ஜோடி கட்டாயம் இருக்க வேண்டுமே.. இதிலும் இருக்கிறார்கள்.. சரியாகவும் அந்த வேலையை செய்திருக்கிறார்கள் ரோகிணி ஜெயராம் தம்பதி.

ஆறு ஏழு வருடங்கள் காதலித்த பெண்கள் கூட தந்தையின் சம்மதத்தை பெற்று திருமணம் செய்ய வேண்டும் என தவிப்பதை தான் இதுவரை பார்த்திருக்கிறோம். பழகிய ஐந்தே நாட்களில் காதலித்த ஒருவனுக்காக தந்தை உள்ளிட்ட குடும்பத்தையே சமந்தா தூக்கி எறிந்து விட்டு வருவது கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

இப்படி இப்படி பக்குவமற்ற காதல்கள் தான் பின்னாளில் பிரச்சனைகளை சந்திக்கின்றன என்பதை மிகச் சரியாகவே இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் சிவா நிர்வானா. படத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஹேசம் அபுதுல் வாகாப்பின் பின்னணி இசையும் பாடல்களும். அது மட்டுமல்ல காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 20 நிமிடம் தான் என்றாலும் ஒரு காஷ்மீர் சுற்றுலா சென்று வந்த உணர்வை கொடுக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி.

சாஸ்திரமோ சம்பிரதாயமோ அல்லது நாத்திகமோ எதுவும் உண்மையான காதலுக்கு குறுக்கே நிற்க முடியாது என்பதை குஷியாக சொல்லி இருக்கிறார்கள்.