கருமேகங்கள் கலைகின்றன ; விமர்சனம்


இன்றைக்கு டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக சமூகம் என்னன்னவோ மாற்றங்களை சந்தித்து வருகின்றன. அந்த விதமாக இப்போதைய திரைப்படங்கள் எந்த விதமான வடிவத்தில் வெளியாகி வருகின்றன என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் குடும்ப உறவுகளின் மேன்மையை வலியுறுத்தும் விதமாகவே படம் எடுத்து வருபவர் இயக்குனர் தங்கர் பச்சான் அப்படி அவரது இயக்கத்தில் அதேபோன்ற உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகியுள்ள படம் தான் கருமேகங்கள் கலைகின்றன.

பாரதிராஜா ஓய்வு பெற்ற நீதிபதி. அவரது மகன், மகள் இருவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க, இங்கே இளைய மகனான வக்கீல் கௌதம் மேனனுடன் இருக்கிறார் பாரதிராஜா. நேர்மைக்கு பெயர் போன அவருக்கு அப்படியே நேரெதிராக பணம் வருகிறதே என்று தப்புக்கு துணை போகிறவர் கௌதம் மேனன். இதனாலேயே இருவருக்குள்ளும் முரண்பாடுகள். தந்தையின் பிறந்தநாளில் கூட ஒன்றுகூட முடியாத பிஸியில் வாரிசுகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் ஒன்று பாரதிராஜாவின் கையில் கிடைக்கிறது. அது அவரது முன்னாள் காதலி எழுதிய கடிதம். தம் இருவரின் மகள் சிறையில் இருப்பதாகவும் முடிந்தால் அவளை காப்பாற்றுமாறும் அதில் எழுதப்பட்டுள்ளது. யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் காதலியை தேடி கிளம்புகிறார் பாரதிராஜா.

இன்னொரு பக்கம் கும்பகோணத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பவர் யோகி பாபு. அவரது மகள் சாரல் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டு அங்குள்ள ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். எனக்கு அங்கே தங்கப் பிடிக்கவில்லை என்றும் தந்தையுடன் தான் இருப்பேன் என்றும் பிடிவாதம் பிடிக்கிறாள் சாரல். ஆனால் யோகிபாபுவோ அவளை பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் தடுத்து நிறுத்தப்படுகிறார். இத்தனைக்கும் உள்ளூரிலேயே சிறுமியின் அம்மா குடியிருக்கிறார்.. எதற்காக இவர்களுக்குள் இந்த பிரிவு ? இவர்களுக்கு பின்னணியில் என்ன நடந்தது என்பது இன்னொரு கதை.

தனது முன்னாள் காதலியை தேடி கிளம்பும் பாரதிராஜாவும் தனது மகளை காண்பதற்கு கிளம்பும் யோகிபாபுவும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அதன்பிறகு அவர்களது வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது மீதிக்கதை.

தங்கர் பச்சான் சொல்ல வந்தது என்னவென்றால் எவ்வளவுதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் அருகாமை அவசியம். குறைந்தபட்சம் அவ்வப்போதாது அவர்களின் அன்பு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது மட்டுமல்ல ஒரு பெண்ணை மணந்து குழந்தையை கொடுத்து விட்டால் மட்டும் அவன் கணவனாகி விட முடியாது என்கிற கருத்தையும் இந்த படத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த படத்திற்கு பாரதிராஜா தான் சரியான தேர்வு என்பதை படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அவர் நிரூபித்து விடுகிறார். பிறகு காதலி மற்றும் மகளை தேடிச் செல்லும்போது அவருடன் சேர்ந்து நம்மையும் பரிதவிக்க வைத்து விடுகிறார்.

காமெடியில் கூட சில படங்களில் யோகி பாபு சொதப்பினாலும் சொதப்புவார், ஆனால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும்போது மட்டும் அவரிடம் இருந்து மிக இயல்பான நடிப்பு வெளிப்பட தவறுவதில்லை. அதற்கு இந்த படமும் ஒரு அத்தாட்சி. குறிப்பாக அவருக்கும் குழந்தைக்குமான பாசம் ஒரு அழகியல் கவிதை.

பாரதிராஜாவின் காதலியின் மகளாக வரும் அதிதி பாலன் அதிர்வில்லாத பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கு தவறுதலாக வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு பாரதிராஜா தான் காரணம் என்று தெரியும்போது கூட அதை இலகுவாக எடுத்துக் கொள்பவர், தனது தாயை பரிதவிக்க வைத்து இந்த நிலைக்கு காரணமாக அமைந்தவர் அவர்தான் என தெரிய வரும்போது அவர் வெளிப்படுத்தும் குமுறல் பாரதிராஜாவின் சோ கால்டு நேர்மைக்கு சாட்டையடி கொடுக்கிறது.

இன்னொரு கதாநாயகியாக நடித்திருக்கும் மஹானா சஞ்சீவும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். அற்புதமான நடிகை.. இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வரலாம். அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவரும் சிறப்பான தேர்வு தான். குழந்தை நட்சத்திரம் சாரல் முகத்தில்தான் எத்தனை விதமாக எக்ஸ்பிரஷன்கள் அழகாக நடிக்க வைத்திருக்கிறார் என்ன தங்கள் பச்சான்.

தங்கர் பச்சான் குடும்ப உறவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் படங்களை எடுக்கிறார் என்பதற்காக அவரை கட்டாயம் பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் இந்த படத்தில் அவர் சொல்ல வந்த விஷயம் என்ன, அதை சரியாக சொல்லி இருக்கிறாரா என்பதில் தான் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை அவர் முடித்த விதம் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.

அதேசமயம் தொய்வில்லாத தெளிந்த நீரோடையாக கதையை நகர்த்தி சென்று இருப்பதால் 2 மணி நேரமும் கதை மாந்தர்களின் பிரச்சினைகளுடன் நாமும் சுற்றித் திரிந்த உணர்வு ஏற்படுவது உண்மை. அதுதான் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியும் கூட