துப்பறியும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் கிராமத்து பின்னணியில் அமைந்த கதை என்றால் இன்னும் சுவாரஸ்யம். அப்படி ஒரு படமாக வெளியாகி இருக்கும் இந்த ‘ஒரு நொடி’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா ? பார்க்கலாம்.
தனது கணவர் எம்.எஸ்.பாஸ்கார் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கும் ஸ்ரீ ரஞ்சனி, கந்து வட்டி தொழில் செய்யும் வேல ராமமூர்த்தி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். வழக்கை விசாரிக்க தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் தமன் குமார், நேரடியாக வேல ராமமூர்த்தியை ரவுண்டப் செய்கிறார்.
காவல்துறையின் விசாரணை நடைபெறுகையில் நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் பார்வதி ( நிகிதா) என்ற இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். காணாமல் போன சேகரனுக்கும், கொலை செய்யப்பட்ட பார்வதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதன் பின்னணி என்ன? யார் கொலை செய்தார்கள்? சேகரன் என்னவானார்? என்பதுதான் படத்தின் விறுவிறு திரைக்கதை.
கதையின் நாயகனாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறனாக தமன் குமார் நடிபபில் மிடுக்கு காட்டியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க கம்பீரமாக வலம் வருகிறார். அவரது குரலும், கண்களும் கதாபாத்திரத்தை எளிதாக ரசிகர்களின் மனதில் கடத்துகிறது. சொல்லப்போனால் தன்னை நிரூபிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பை தமன் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
நகைக்கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணாக நடித்திருக்கும் நிகிதா, அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் இயல்பாக்க இருப்பதுடன் படத்தின் திருப்புமுனைகும் காரணமாக அமைந்திருக்கிறார்.
திரைக்கதையைத் தொடங்கி வைக்கும் கதாபாத்திரம் என்பதால் கொஞ்சநேரமே வந்தாலும் நிலைத்து நிற்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அரசியல்வாதியாக வழக்கம்போல வேல ராமமூர்த்தி படபட பட்டாசாக வெடித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் பழ.கருப்பையா,நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர், முடிதிருத்தும் கலைஞர் விக்னேஷ் ஆதித்யா ஆகியோரும் பொருத்தமான தேர்வு. எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி உணர்ச்சிகரமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
கே.ஜி.ரத்தீஷின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்துள்ளது. எஸ்.குரு சூர்யாவின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது. சஞ்சய் மாணிக்கம் இசையில், சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் ஆகியோரது வரிகளில், பாடல்கள் இனிமை. பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம் பயணித்திருக்கிறது.
நொடிநேரத்தில் நாம் எடுக்கும் முடிவு எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதை அழகாக படமாக்கி இருக்கும்இயக்குனர் பி.மணிவர்மன் படத்தின் சஸ்பென்ஸை எங்கும் பலவீனப்படுத்தாமல் இறுதி வரை கட்டிக் காப்பதில் வெற்றி பெற்றுள்ளார். பல லாஜிக் மீறல்கள் ஓட்டைகள் இருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் இவையெல்லாம் பெரிதாக தெரியவில்லை. மேலும் யாரும் யோசிக்காத வகையில் உச்சகட்ட காட்சி அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பலம்.
ஒரு நொடி ; இரண்டரை மணி நேர(மு)ம் கூட ரசிக்கலாம்.