கிராமத்து மனிதர்களிடம் உள்ள வெள்ளந்தி மனது, அதேசமயம் அவர்களிடம் இருக்கும் நடப்பு, துரோகம், விசுவாசம் என கலந்து ரத்தமும் சதையுமாக உருவாக்கி இருக்கும் படம் தான் கருடன். விடுதலை படத்தின் மூலம் தன்னை ஒரு கதையின் நாயகனாகவும் நிரூபித்தவர் சூரி. இந்தநிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கருடன். இதில் ஹீரோவாகவும் அவர் சாதித்திருக்கிறாரா ? பார்க்கலாம்.
வடிவுக்கரசியின் பேரன் உன்னி முகுந்தன். அவரும், சசிகுமாரும் சிறுவயது முதல் இணைபிரியாத நண்பர்கள். மேலும், அதே சிறுவயதில் தனக்கொரு பெயர் கூட இல்லாமல் அநாதையாக சுற்றித் திரிந்த சூரியை கருணா தன் வீட்டுக்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுக்க, , அப்போது முதல் உன்னியின் அதிதீவிர விசுவாசியாக மாறுகிறார் சூரி.
இந்தநிலையில் கோவிலின் பல கோடி சொத்துமதிப்புள்ள நிலத்தை சமுத்திரக்கனி உள்ளிட்ட சிலரின் ஆதரவுடன் ஆக்கிரமிக்க நினைக்கிறார் அமைச்சர் ஆர்.வி உதயகுமார். அதற்காக அந்த கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அந்த வங்கி லாக்கர், கோயிலின் தர்மகர்த்தாவான வடிவுக்கரசி) பொறுப்பில் இருந்து வருகிறது.
மிகவும் ஒற்றுமையாக இருக்கும் ஆதி, கருணா, சொக்கன் ஆகிய இவர்களைத் தாண்டி தான் கோயில் நிலப் பட்டாவை வங்கி லாக்கரிலிருந்து எடுக்க வேண்டும் என்ற நிலையில் இதில் சூழ்நிலை காரணமாக உன்னி முகுந்தன் சசிகுமாருக்கு துரோகம் செய்ய முயற்சிக்க, சூரி விஸ்வாசத்திற்காக தனது முதலாளி பக்கம் நின்றாரா? அல்லது குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரின் நியாயம் பக்கம் நின்றாரா என்பது மீதிக்கதை.
சூரி ‘விசுவாசம்’ என்ற வார்த்தையின் உயிருள்ள உருவகமாக இந்த அதிரடி நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்து ஒரு அற்புதமான நடிகராக வெளிப்படுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் சூரி.
வழக்கம்போல நண்பேன்டா என்கிற விதமாக சசிகுமார் அழுத்தமான நடிப்புடன் தனித்து நிற்கிறார். உன்னிமுகுந்தன் நட்பு, பாசம், துரோகம் என அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவருக்கும் திரை பிரவேசத்தை சமமாக பகிர்ந்து அசத்தியிருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் திரை தோற்றம் மற்றும் நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.ஆதியின் மனைவி தமிழ் செல்வியாக ஈர்க்கக்கூடிய கதாபாத்திரத்தில் ஷிவதா தேவையான நடிப்பை வழங்கி கதைக்கு உயிரோட்டத்தை அளித்திருக்கிறார். செல்லாயி அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, கருணாவின் மனைவி அங்கயற்கண்ணியாக வரும் ரோஷினி ஹரிப்ரியன், பர்வினாக வரும் பிரிகிடா உள்ளிட்ட பலரும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளை மக்கள் மனதில் நிற்க வைத்துவிடுகிறது. ஆர்தர் ஏ.வில்சனின் அனுபவம் மிக்க ஒளிப்பதிவும், பிரதீப் இ.ராகவின் உறுத்தல் இல்லாத படத்தொகுப்பும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
மூன்று நண்பர்களுக்கு இடையேயான நட்பு, பகை, வஞ்சகம் மற்றும் ஈகோ, அதில் ஒரு நண்பனின் விசுவாசம், என சுவாரஸ்யமான கதைக்களத்தில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத முடிச்சுகள் உச்சக்கட்டத்தை அடையும் எமோஷனல் காட்சிகளுடன் திரைக்கதை அமைத்து அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் சிறப்பாகக் கையாண்டு இயக்கி உள்ளார் இயக்குனர் துரை செந்தில்குமார்
சூரி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்.