தங்கமகன் – விமர்சனம்

அப்பா மீது சுமத்தப்பட்ட களங்கத்தை மகன் துடைக்கும் ஆரம்பகால எம்.ஜி.ஆர், ரஜினி பாணி கதைதான்..

விடலைப்பருவத்தில், எமி ஜாக்சனை லவ் பண்ணி, முரண்பாட்டால் அந்த காதலில் இருந்து ஒதுங்குகிறார் தனுஷ். இன்கம்டாக்ஸ் ஆபிசில் வேலைபார்க்கும் அப்பா கே.எஸ்.ரவிகுமார், மகன் தனுஷுக்கும் தன் ஆபிசிலேயே வேலை வாங்கி தருகிறார். அப்படியே அவருக்கு சமந்தாவை திருமணம் செய்தும் வைக்கிறார்கள்.

மேலதிகாரி ஜெயபிரகாஷ் தான் வாங்கிய லஞ்சப்பணத்தை ரவிகுமாரிடம் கொடுத்து மறைத்து வைக்க சொல்ல, அது அவரிடம் இருந்து மிஸ்சாகிறது. அதனால் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு அப்பா, மகன் இருவரின் வேலையும் பறிபோக போக, மனமுடைந்த ரவிகுமார் தற்கொலை செய்துகொள்கிறார். தனுஷ் தன் தந்தையின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை எப்படி துடைக்கிறார் என்பதுதான்  மீதிப்படம்.

குடும்பத்துக்கு அடங்கிய பிள்ளையாக ஒரு பேமிலி படம் பண்ணித்தான் பார்ப்போமே என ஒரு ‘புதியபாதை’யில் அடியெடுத்து வைத்திருக்கிறார் தனுஷ்.. செஞ்சிருவேன், கிழிச்சிருவேன்னு வீர வசனம் பேசாமல் அவர் அமைதியா நடிச்சிருக்கிறதே மிகப்பெரிய ஆறுதல். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது உருவமாற்றமும், அதற்கான உடல்மொழியும், நடிப்பில் பக்குவமும் என அலட்டிக்கொள்ளாமல் செய்திருக்கிறார்.

எமி ஜாக்ஸனுக்கும் அவருக்குமான ஆரம்பகட்ட காதல் காட்சிகளை பார்க்கும்போது ஏதோ செல்வராகவன் படத்துக்குத்தான் வந்துவிட்டோமோ என நினைக்கும் அளவுக்கு அநியாயத்துக்கு இளசுகளை சூடேற்றுகிறார்கள் இருவரும். சேலை தவிர எந்த ஒரு உடையிலும் சமந்தாவை பார்க்கமுடியாத அளவுக்கு டிபிகல் இல்லத்தரசியாக மாறியுள்ளார். இதுகூட நன்றாகத்தான் இருக்கிறது.

தனுஷுக்கும் சதீஷுக்குமான காமெடி உரையாடல்கள் கலகலப்பு ரகம்.. ஞாபக மறதி கொண்ட மிடில் கிளாஸ் தந்தையாக கே.எஸ்.ரவிகுமார், யதார்த்த ராதிகா, வில்லத்தனம் காட்டும் ஆதித், ஜெயபிரகாஷ் எல்லோரும் கதைக்குள் கச்சிதமாக வந்து போயிருக்கிறார்கள். அனிருத்தின் பங்களிப்பு பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

வி.ஐ.பி படத்தில் வந்த மாதிரியே சின்னப்பையன் வில்லத்தனம் பண்ணுவது, பெரிய மனுஷன் ஆள்விட்டு அடிப்பது, குடித்துவிட்டு வண்டி ஓட்டும்போது போலீஸ் பிடிப்பது, வில்லன் திருந்துவது என சென்டிமென்ட் கிளிஷேக்களும் உண்டு.. படாபடா திருப்பங்கள் வேண்டாம், எந்த பஞ்ச் டயலாக்கும் வேண்டாம், உறவுகளின் மேன்மையை அழுத்தமாக சொன்னால் போதும் என ஒரு பேமிலி ட்ராமா நடத்தியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்..