தூங்காவனம் – விமர்சனம்

போதை மருந்து கடத்தல்காரரான பிரகாஷ்ராஜுக்கு சேரவேண்டிய ‘சரக்கை’ திர்ரமிட்டு கடத்துகிறார் போலீஸ் அதிகாரியான கமல்.. அப்படியா சங்கதி என கமலின் மகனை பதிலுக்கு கடத்தி சரக்கை ஒப்படைக்க சொல்கிறார் பிரகாஷ்ராஜ். மகனை மீட்பதற்காக சரக்குடன் பிரகாஷ்ராஜின் நைட் கிளப்புக்கு செல்கிறார் கமல்..

அவர்மீது சந்தேகப்பட்டு பின் தொடர்கிறார்கள் போலீஸ் அதிகாரிகளான த்ரிஷாவும் கிஷோரும். இந்த களேபரத்தில் கமல் பத்திரமாக மறைத்து வைத்த சரக்கு மிஸ்ஸிங்.. அந்த ஒரு இரவுக்குள் தனது மகனை மீட்க தூக்கத்தை தொலைத்த கமல் நடத்தும் யுத்தம் தான் தூங்காவனம்.

‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்கிற பிரெஞ்சு படத்துக்கு ‘தூங்காவனம்’ என்கிற சட்டையை மாட்டி கமல் என்கிற தொப்பியை வைத்துள்ளார் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா.. கமல் என்று மட்டும் குறிப்பிடாமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், யூகிசேது, ஆஷா சரத், மதுஷாலினி என ஒவ்வொருவரும் இந்த ஒருநாள் ஆடு புலி ஆட்டத்தில் சிறப்பாக தங்களை பொருத்திக்கொண்டுள்ளார்கள்.

சமீபத்திய இரண்டு படங்களில் ஆக்சன் பிளாக் இல்லாத குறையை இதில் தீர்த்துவைத்துள்ளார் கமல். த்ரிஷாவுடனும் அவருக்கு ஒரு டப் பைட் இருக்கிறது.. மதுஷாலினி-கமல் முத்தக்காட்சி எல்லாம் தேவையா பாஸ்..? வலிந்து திணிக்கப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. அந்த நைட் கிளப் செட்டை நிர்மாணித்தவருக்கு ஒரு சபாஷ். படத்தின் கதையை நகர்த்த உதவியிருக்கும் அந்த நைட் கிளப்தான் சில நேரங்களில் கதையின் வேகத்தை இழுத்து பிடிக்கவும் செய்கிறது..

ஒரே பாடலை மட்டும் போட்டுக்கொடுத்துவிட்டு பின்னணி இசையில் தனது முழு உழைப்பையும் தந்துள்ளார் ஜிப்ரன். சானு வர்கீசின் ஒளிப்பதிவில் படம் முடிவதற்குள் அந்த கிளப்பின் அத்தனை பகுதிகளுக்கும் நமக்க வழி அத்துப்படி ஆகிவிடுகிறது. ஒருநாளில் நடக்கும் சம்பவங்களை படமாக்கும்போது போரடிக்காத கதைக்களம் மிக முக்கியம்.. இதில் படத்தின் பலமும் பலவீனமும் அந்த நைட் கிளப் தான். இருந்தாலும் தூங்காவனம் உங்களை தூங்கவிடாமல் படத்தை பார்க்க வைத்துவிடுவதில் மயிரிழையில் தப்பிக்கிறது.