அலைக்கழிக்கப்படும் ஓய்வு பெற்ற உதவி காவல்ஆய்வாளர்.. கண்டுகொள்வாரா முதல்வர்.?

எனது பெயர் சிவக்குமார், எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். எனது தந்தை காவல்துறையில் 33 ஆண்டுகள் பணி செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் கோயமுத்தூர் இருப்பு பாதை காவல்நிலையத்தில் 1964 ம் ஆண்டு பணி செய்து கொண்டிருக்கும் போது தங்க கட்டிகள் (18) கடத்தி வந்தவரை கைது செய்தவர். நானும் 1993ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு கடைசியாக இரயில்வே திருப்பூரில் பணி செய்து வந்தேன். நான் சிறுவயதில் உதகை பஸ் நிலையம் அருகே நியூஸ்பேப்பர் விற்பனை செய்தும், கட்டிடம் வேலை செய்தும் பின்பு ஓட்டலில் வேலை செய்து பின்பு தான் காவல்துறையில் சேர்ந்தேன். நான் இரயில்வே காவல் நிலையத்தில் வேலை செய்து வரும்போது 2015ஆம் ஆண்டு என்னை வேண்டும் என்றே திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு காவல்நிலையத்தில் 1 மாதம் தனி அலுவலாக அனுப்பி வைத்தனர். நானும் அதிகாரிகளின் ஆணையை மதித்து செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு சென்றேன்.

அப்போது எனது மகள் 12ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணிமாறுதல். நான் செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு 1 மாதம் தனி அலுவல் முடிந்தும் என்னை மாற்றம் செய்யாமல் இருந்ததால் நான் மருத்துவ விடுப்பில் சென்றேன். அப்போது எனக்கு இரண்டு மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. நானும் அதிகாரிகளை சந்தித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

எனக்கு பதவி உயர்வு ஒன்றரை வருடம் கழித்து தான் HC to SSI வழங்கப்பட்டது. காரணம் கேட்டால் சர்வீஸ்புக் காணாமல் போய்விட்டது என்று கூறினார்கள்.
பிறகு மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்திற்கு வந்து பணி செய்து கொண்டிருக்கும்போது மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து காட்பாடி இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்தார்கள். அப்போது எனது மகன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணி மாறுதல் ஏன் பழி வாங்குகிறார்கள். எனது குழந்தைகளின் வாழ்க்கை கல்வியை நான் எப்படி பார்ப்பது? மேலும் காட்பாடி இரயில்வே காவல் நிலையத்திற்கு இருந்து மேட்டுப்பாளையம் இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றுதல் வாங்கி வந்தேன்.

ஆனால் என்னை 1 மாதம் கூட வேலை செய்யவிடாமல் கோயமுத்தூர் இரயில்வே காவல்நிலையம் ஈரோடு இரயில்வே காவல்நிலையம் ஆகிய காவல்நிலையங்களில் அடிக்கடி மாற்றம். ஏன் என்று கேட்டால் நீங்கள் தான் அனுபவசாலி என்று கூறி கொடுமை செய்தார்கள். பிறகு திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் யாரும் இல்லை. நீங்கள் தான் வந்து வேலை செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தி மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் வந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது காவல் ஆளினர்கள் யாரும் சரியான நேரத்திற்கு பணிக்கு வரமாட்டார்கள். இரவு பணிக்கும் 8.00 மணிக்கு வரவேண்டும்.

ஆனால் காவல் ஆளினர்கள் 10.00 மணிக்கு வருவார்கள். வரும்போது மதுபோதையில் தான் வருவார்கள். இரவு 1 மணி வரை வேலை செய்வார்கள். அதற்கு அவர்களை பார்க்கவே முடியாது எங்கே படுத்து எந்திரித்து காலை 6.00 மணிக்கு வந்து அறிக்கை செய்வார்கள். யாரையும் கேள்வி கேட்ககூடாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். காரணம் எஸ்.பி., டிஐஜி, ஐஜி அதிகாரிகள் சென்னையில் இருப்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு காவலர் பணிக்கு வராமல் 3 நாட்கள் இருந்தவரை அழைத்து அறிவுரை வழங்கியபோது என்னை வசைச்சொல்லில் திட்டினார். நான் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அவர் அந்த காவலர் எந்த ஜாதி என்று கேட்கிறார். இப்படி காவல்துறை சென்று கொண்டிருப்பதால் மனமுடைந்து இனிமேல் காவல்துறையில் நல்லவர்கள் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்து கடந்த 2020ம் தேதி விருப்ப ஓய்வுக்கு மனு சமர்ப்பித்தேன்.

விருப்ப ஓய்வு பெற்று 1 வருடம் ஆகியும் எனக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எஸ்.பி., டிஐஜி அவர்களிடம் பலமுறை தெரிவிக்க எந்த தகவலும் இல்லை. நான் காவல்துறையில் 28 ஆண்டுகள் வேலை செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்து வந்தேன். நான் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் பணி செய்து வந்தபோது என்னால் ஒருவரின் உயிரையும் காப்பாற்றி உள்ளேன். இதுதான் எனக்கு சந்தோஷம். நல்லவர்கள் வேலை செய்ய வருவது இல்லை. காவல்துறை ரொம்ப மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

– சிவக்குமார், தலைமை காவலர் எண் 110