ஆதார் ; விமர்சனம்

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், ஒரு சாமானிய மனிதனுக்கும் இடையில் எப்படிப்பட்ட ஒரு நீதி கிடைக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கும் படம் தான் ஆதார்.

சாதாரண கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார் கருணாஸ். அவரது மனைவி ரித்விகா குழந்தை பெற்ற நிலையில் திடீரென் காணாமல் போகிறார். மனைவியை கண்டுபிடித்து கொடுக்க சொல்லி போலீசில் புகார் அளிக்கிறார் கருணாஸ். விசாரிக்கும் அவர்கள், ஒரு பகீர் தகவலைச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் பச்சைமுத்து. அவர் மனைவி எங்கு சென்றார், என்ன ஆனார் என்பதுதான் படம்.

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் படங்களை இயக்கிய ராம்நாத் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். முதல் இரண்டு படத்தை விடவும் இந்த படத்தை வித்தியாசமாக கொடுத்து நம்மை வியக்க வைத்திருக்கிறார். சாதாரண மக்கள் காவல்நிலையத்தில் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்.

கிழிந்த பனியனும் அழுக்கு லுங்கியுமான அவருடைய பரிதாப தோற்றம் வழக்கமான வறுமை தொழிலாளியை, அப்படியே காட்டுகிறது. மனைவியை காணாமல் கதறும்போதும், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தவிக்கும்போதும், அதிகாரத்தின் மிரட்டலில் ஏதும்செய்ய இயலாதவராகப் பரிதவித்து நிற்கும்போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கர்ப்பிணியான ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கிடைத்த கேப்-பில் ஸ்கோர் செய்கிறார்.
உதவி காவல் ஆணையர் உமா ரியாஸ், பாகுபலி பிரபாகர், அருண்பாண்டியன் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை நம்மை நெகிழ வைக்கிறது.

இரண்டு மணி நேரம் படம் மெதுவாய் நகர்கிறது என்பது மட்டுமே குறை.

மொத்தத்தில் ஆதார் அவசியம் பார்க்க வேண்டிய படம்.