அயலி – விமர்சனம்

இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் அபிநயஸ்ரீ, அனுமோல், அருவி மதன், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள வெப்தொடர் அயலி. ரேவா இசையமைத்துள்ள இந்த வெப்தொடர் ஜீ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

பெண் பருவம் அடைந்த சில மாதங்களிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும், என்ற கட்டுப்பாடு கொண்ட கிராமம் வீரபண்ணை. இந்த கட்டுப்பாட்டினால் அந்த கிராமத்தில் எந்த ஒரு பெண்ணும் 9-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத சூழலில், 8ம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீ, நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது ஆசை நிறைவேறாது என்று சக தோழிகள் சொல்ல, தனது கிராமத்து பழக்க வழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தகர்த்து எறிந்து தனது இலக்கை நோக்கி முன்னேறுவதில் அபிநயஸ்ரீ முனைப்பு காட்டுகிறார்.

அபிநயஸ்ரீ நினைத்தது போல் படித்தாரா? இல்லையா? அவரது செயல்பாடுகளினால் அந்த கிராமத்தில் மாற்றம் ஏற்பட்டதா? இல்லையா? என்பதை சொல்லியிருப்பதே ‘அயலி’.

கதை 1990ம் காலக்கட்டத்தில் நடக்கிறது. அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் சகஜம் என்றாலும், தற்போதைய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் பல வகைகளில் ஒடுக்கப்படுகிறார்கள், என்பதை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக, பெண் பருவமெய்தலை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயம் என்று இன்னும் பழமையோடு வாழும் மக்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கும் இயக்குநர், எவ்வளவு சாதாரணமான ஒரு விஷயத்தை மூட நம்பிக்கையால் எவ்வளவு பெரிய விஷயமாக்கி மக்களை முட்டாளாக்குகிறார்கள், என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.

தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயஸ்ரீ, தனது லட்சியத்தை நோக்கி தைரியமாக பயணிப்பதும், இடையில் வரும் தடைகளை தனது குழந்தை தனத்தோடு தகர்த்தெறிந்து தொடர் வெற்றி பெறுவது, என்று அந்த கதாபாத்திரமாக நம் மனதில் பதிந்து விடுகிறார்.

தமிழ்செல்வியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல், தமிழ்செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன், வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் லிங்கா, சிங்கம்புலி, வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர்.சீனிவாசமூர்த்தி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், ரேவாவின் பின்னணி இசையும் தொடருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில், ‘அயலி’ அனைவரும் பார்க்க வேண்டிய இணையத் தொடர்.