சார்லஸ் எண்டர்பிரைசஸ் ; விமர்சனம்

கணவர் குரு சோமசுந்தரத்தை பிரிந்து வாழும் ஊர்வசி குடும்பக் கோயிலில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வணங்கி வருகிறார். அவரது மகன்தான் கதையின் நாயகன் பாலு வர்கீஸ். இந்நிலையில் பழங்காலப் பொருட்களை வெளிநாட்டில் விற்கும் பெண் தாதா தலைமையிலான கும்பல் ஒன்று பாலு வர்கீசை அணுகி அந்த விநாயகர் சிலையைக் கேட்டு 50 லட்சத்துக்குப் பேரம் பேச அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் விநாயகர் சிலையை விற்றால் கிடைக்கும் பணத்தில் செட்டிலாக நினைத்து அந்த சிலையை ஒரு கட்டத்தில் சார்ல்ஸ் (கலையரசன்) உதவியுடன் அவரே திருடுகிறார். நினைத்தபடி அந்த சிலையை அவர்களால் விற்க முடிந்ததா? பாலு வர்கீசால் தொழில் தொடங்க முடிந்ததா என்பது மீதிக்கதை.

ஒரு நாயகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணங்களை அடித்து உடைத்து இயல்பான ஒரு இளைஞனாக தோற்றமளிக்கிறார் பாலு வர்கீஸ். அப்பாவியான முகத்துடனும் அதற்கேற்ற நடிப்புடனும் வருகிறார் நாயகன் பாலுவர்கீஸ். தன் குறைபாட்டைத் தாண்டிச் சாதிக்கவேண்டுமென்ற துடிப்பு இரசிகர்களுக்கு உத்வேகம். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார் ஊர்வசி.அவருடைய படபடப்பு துடிதுடிப்பு ஆகியன அவருடைய வேடத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் சிரிக்கவைக்க நினைத்திருக்கிறார் சில இடங்களில் சிரிக்கவைக்கிறார்

சிறந்த நடிகராக அறியப்பட்ட குரு சோமசுந்தரத்துக்கும் அவரது நடிப்புக்குப் பெரிய தீனி கிடைக்காமல் போனாலும் இயல்பாக வந்து போகிறார். கலையரசன் திருடன் என்றாலும் அவர் நடிப்பில் வழக்கம் போல யதார்த்தம். சிலைக்கு விலைபேசும் அபிஜா சிவகலா, அவர் உதவியாளர் மணிகண்டன் ஆச்சாரி, கலையரசன் ஜோடியாக வரும் மிருதுளா ஆகியோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவும் சுப்ரமணியன் கே.வி இசையும் ஓகே. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் படம். சுவாரஸ்யமாகச் சொல்வதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட கதையை, கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம். கடவுள் சிலையை மையமாகக் கொண்ட கதையை எழுதி அதில், கடவுள் தொடர்பான தொழில்கள் இலாபம் கொடுப்பவை எனச் சொல்லியிருக்கிறார் ஆனால், அதை சொன்ன விதத்தில் தான் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார்.

மற்றபடி ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படம் தான் இந்த சார்லஸ் எண்டர்பிரைசஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *