அடியே ; விமர்சனம்

நீண்ட நாளைக்கு பிறகு ஒரு ஜீவி பிரகாஷ் படம். அறிவியலையும் காதலையும் ஒன்றிணைத்து ஒரு காதல் கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

பள்ளி பருவத்தில் எப்போதோ தன்னுடன் படித்த கௌரியை ஒருதலையாய் காதலித்த ஜி.வி.பிரகாஷ் காதல் கடிதம் கொடுக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைக்கையில் தனக்கு காதல் கடிதம் கொடுத்த அந்த மனிதன் யார் என கௌரி தேடி வருவதை அறிகிறார்.

அவரிடம் உண்மையைச் சொல்லி காதலை வெற்றி பெற வைக்க ஜீவி பிரகாஷ் முயற்சி எடுக்கும் நேரத்தில் அதற்கு பலவித கடைகள் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் விபத்திலும் சிக்குகிறார்

ஆனால் கண்விழித்து பார்க்கும் போது தான் ஒரு பிரபல இசையமைப்பாளராக இருப்பதுடன் தனது மனைவியாக கௌரியே இருப்பதையும் கண்டு அவர் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து நாமும் அதிர்ச்சி அடைகிறோம். ஆம் விபத்தில் சிக்கி சுயநினைவு இல்லாமல் இருக்கும் நேரத்தில் அவர் மாற்று உலகிற்குள் வேறு ஒரு மனிதராக வாழ்ந்து வருகிறார்.

இப்படி அந்த மாற்று உலகத்திற்கும் இப்போது இருக்கும் நிஜ உலகத்திற்கும் இடையே மாறிமாறி பயணிக்கும் அவர் நிஜத்தில் தனது காதலியான கௌரியை அடைந்தாரா, இல்லையா என்பது தான் மீதிக்கதை.

புரிந்து கொள்வதற்கு சற்றே கடினமான கதை என்றாலும் அதை இலகுவாக தர முயற்சித்திருக்கிறார்கள். இரண்டு விதமான கதாபாத்திரங்கள்.. இரண்டிலுமே வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ். குறிப்பாக அந்த இசை அமைப்பாளர் கதாபாத்திரத்தில் ரொம்பவே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கௌரி கிஷன் தனி கதாநாயகியாக நடிக்கும் முதல் படம் என்று கூட இதை சொல்லலாம். படம் முழுவதும் தனது கதாபாத்திரத்தை அருமையான நடிப்பால் தாங்கி பிடித்து இருக்கிறார். குறிப்பாக இவர்களது பள்ளிக்கால காதல் கதை ரசிக்கும்படியாக இருக்கிறது.

ஜி.வி. பிரகாஷின் நண்பர்களாக வரும் ஆர்ஜே விஜய் எதிர்பாராத ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ள மதும்கேஷ் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

விஞ்ஞானியாக வரும் வெங்கட் பிரபுவின் அலப்பறை தான் படம் நெடுக கொடிகட்டி பறக்கிறது. கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஒன்லைன் கவுண்டர்கள் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் தனது இசையால் புது வடிவம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். அது மட்டுமல்ல இரு விதமான உலகங்களை சித்தரித்து இருப்பதில் கோகுல் பினாயின் ஒலிப்பதிவும் முக்கிய பங்காற்றியுள்ளது.

இது போன்ற சயின்ஸ் பிக்சன் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதால் பல காட்சிகளை போகிற போக்கில் ரசித்து விட்டுப் போக வேண்டும். அந்தவகையில் பேண்டஸி கதைகளை ரசிப்பவர்களுக்கு இந்த படம் இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்காக நிச்சயம் இருக்கும்.