பாயும் ஒளி நீ எனக்கு ; விமர்சனம்

தனது நண்பருடன் இணைந்து ஸ்டார்அப் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் அரவிந்த் (விக்ரம் பிரபு). சிறு வயதில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக அவரால் குறைந்த ஒளியில் பார்க்க முடியாது. இப்படியான பிரச்சினையை எதிர்கொண்டு வரும் அவர், ஒருநாள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் ஒருவரை ரவுடிகளிடமிருந்து மீட்கிறார். அதன் எதிரொலியாக அவரை பழிவாங்க ஒரு கூட்டம் திட்டம் தீட்ட, மறுபுறம் அவரது சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னைச் சுற்றி நடப்பது புரியாமல் தவிக்கும் அரவிந்த் ஒரு கட்டத்துக்குப் பின் குற்றவாளிகளை நெருங்கி தனது இழப்புக்கு எப்படி பழிதீர்க்கிறார் என்பது திரைக்கதை.

விக்ரம் பிரபு தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். வாணி போஜன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த மாதிரியான க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு பலமே திரைக்கதைதான். ஆனால் அடுத்தடுத்து யூகிக்க முடியும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய மைனஸாக அமைந்துள்ளது. இதனாலே படத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது.

இசையமைப்பாளர் மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகரின் பின்னணி இசை காட்சிகளில் கூட்டாத விறுவிறுப்பை இசையில் கூட்ட உதவியிருக்கிறது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் பிரித்து காட்டும் இடங்களில் கவனம் பெறுகிறது.

சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதனை கதையின் போக்கில் கொண்டு செல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கு சாதகமாக வளைத்து நெளித்து எழுதியிருப்பது சுவாரஸ்யத்தை மட்டுபடுத்துவதுடன் செயற்கைத் தன்மையை கூட்டிவிடுகிறது.