ரெபல் ; விமர்சனம்


ஒரு உண்மை சம்பத்தைத் தழுவி சர்ச்சைக்கிடமான கதை, திரைக்கதையில் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். 1980-களில் நடக்கும் கதை.

மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞன் கதிர் (ஜி வி பிரகாஷ் குமார்). அவரது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டை நம்பியும் சிறு சிறு தொழில்களை நம்பியே பிழைத்திருக்கிறது. அது போன்று பல குடும்பங்கள் இதே வறுமை பின்னணியில் வாழ்கிறது. அவர்களின் வாழ்வை மாற்றும் ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்விதான். வறுமையின் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பாலக்காடு சித்தூர் கல்லூரியில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரிசர்வேஷன் கோட்டாவில் சில தமிழ் மாணவர்களும், ஜி வி பிரகாஷ் குமாரும் அவரது நண்பரும் சேருகின்றனர்.அங்கு கேரள மாணவர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றனர்.

அந்த கல்லூரியில் இரண்டு கேரள மாணவ சங்கங்கள் இருக்கிறது. அச்சங்கங்கள் வைக்கும் சட்டம் தான் கல்லூரியை ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்களால் அக்கல்லூரியில் படிக்கும் பிற தமிழ் மாணவர்களுக்கு பிரச்சனையும், வலிகளும் மட்டுமே மிச்சம். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை ஜி வி பிரகாஷ் குமார் எதிர்த்து போட்டியிடுகிறார்.இறுதியில் இந்த போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் வென்றாரா? இல்லையா? என்பதே மீதி கதை.

தனது திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு புரட்சியாளன் வேடத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், அதற்காகப் பெரிதும் மெனக்கெடவில்லை. அதேசமயம் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை முதல்முறையாக சந்திக்கும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தயக்கத்துடன் பேசுவதில் துவங்கி, கடைசியாக இவர்களின் கட்சி அரசியலைப் புரிந்து கொண்டு அதேபோல் தானும் மாறுகின்ற காட்சிவரையிலும் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

சமீபநாட்களாக பிரேமலு படம் மூலம் இளைஞர்களை வசியம் செய்துள்ள நாயகி மமிதா, கல்லூரி மாணவியாக வருகிறார். பெரிதான ஸ்கோப் படத்தில் இல்லையென்றாலும், தோன்றிய காட்சிகளில் க்யூட்டாக தனது நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, இருவரும் படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை நிலையை மாற்றும், அதைப்பெறுவதற்கு எத்தகைய இன்னல்களையும் தாங்கி கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள். தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். படத்தின் மாஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகளை கச்சிதமாகக் படம்பிடித்து காண்பித்து இருக்கிறார். ஜிவி பிரகாஷ், சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகே.

புரட்சிகரமான கதை என்றாலும், அதை கல்லூரி மாணவர்கள் கொண்டாடும் விதமாகவும், திரை ரசிகர்கள் ரசிக்கும் விதமாகவும் கமர்ஷியலாக கொடுத்திருக்கும் இயகிகுநர் நிகேஷ் ஆர்.எஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரை ஹீரோவாக அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.