சீதாராமம் ; திரை விமர்சனம்

மதம், மொழி உள்ளிட்ட அனைத்து தடைகளையும் தாண்டியது காதல் என்பதை சொல்லு படைப்பு தான் இந்த சீதா ராமம்.

பாகிஸ்தான் நாட்டின் பிரிகேடியரான சச்சின் கேடேகர், இறப்பதற்கு முன்பாக ஒரு கடிதத்தையும் ஒரு பெட்டகத்தையும் இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் சேர்க்க சொல்வதால், அவரது பேத்தி ராஷ்மிகா சீதாவை தேடி இந்தியா வருகிறார். அவரை தேடி அலையும் ராஷ்மிகாவுக்கு சீதா – ராமின் காதல் கதை அறிமுகமாகிறது.

யார் இந்த சீதா – ராம் ? அவர்களின் காதல் கதை என்ன ? அந்த கடிதத்தில் என்ன உள்ளது ? இறுதியில் அந்த கடிதம் சீதாவுக்கு கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது தான் சீதாராமம்.

80-களில் நடக்கும் கதையாகவும் 60-களில் நடக்கும் கதையாகவும் படத்தை உருவாக்கியுள்ளனர். நம்மை அந்த காலத்திற்கே நம்மை கொண்டு சென்று விட்டார் இயக்குனர் ஹனுராகவபுடி. சீதாராமம் என்னும் இந்த காவியக்காதலை நமக்கு அழகாக கொடுக்க ஹனுவுடன் சேர்ந்து, ஒளிப்பதிவாளர் வினோதும் கலை இயக்குனர் வைஷ்ணவி ரெட்டியும் உழைத்திருக்கிறார்கள். இவர்களின் பங்கே படத்திற்கு மிகப்பெரிய பலம்.

அடடே என நம்மை சொல்லவைக்கிறது துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் ஆகியோரின் நடிப்பு. இந்த படத்தில் லெப்டினன்ட் ராமாக வாழ்ந்துள்ளார் துல்கர். என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு என படம் பார்த்த அனைவரையும் சொல்ல வைத்துள்ளார்.

சீதா மகாலட்சுமியாக மிருணாள் தாக்கூர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவரின் கதாப்பாத்திரம் யாரும் எதிர்பாராத ஒன்றாக உள்ளது.

இந்த சீதா ராமின் காதல் கதையில் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய வேடம். இதுவரை நாம் பார்க்காத ராஷ்மிகாவை இதில் நாம் பார்க்கலாம். கதையை நகர்த்தி செல்வதே ராஷ்மிகாவின் கதாப்பாத்திரம் தான்.

பிரிகேடியராக பிரகாஷ் ராஜ், மேஜராக கௌதம் வாசுதேவ் மேனன், ராணுவ அதிகாரியாக சுமந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகரின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன.
நிச்சயம் இந்த சீதாராமம் ரசிக்க வைக்கும்.