விடுதலை 1 ; விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் முதல் முறையாக கதையின் நாயகனாக சூரி நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் விடுதலை 1.

80களில் மக்களுக்கு வேலை வாய்ப்பு, இந்திய நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் கணிம வளங்களை சுரண்ட நினைக்கிறது வெளிநாட்டு நிறுவனம். அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருக்க, இதனை எதிர்த்து தமிழர் மக்கள் படை தாக்குதல்களை நடத்துகிறது. அந்தப் படையை அழிக்கவும், அதன் தலைவர் பெருமாளைப் (விஜய் சேதுபதி) பிடிக்கவும் காவல்துறை பல குழுக்களை அமைக்கிறது. இந்த நேரத்தில் புதிதாக போலீஸ் வேலைக்கு சேர்கிறார் குமரேசன் (சூரி). அந்த சூழலுக்கே புதியவரான குமரேசன், போலீஸ் அதிகாரிகளின் பற்றியும், அந்த ஊர் மக்களைப் பற்றியும், தமிழர் மக்கள் படை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இதன் பிறகு குமரேசனுக்கு வரும் சவால்கள் என்ன? ‘வாத்தியார்’ என்ற பெருமாள் போலீஸில் பிடிபட்டாரா என்பது தான் ‘விடுதலை பாகம் 1’ படத்தின் கதை.

வழக்கம்போல் தன்னுடைய டிரேட் மார்க் காட்சி அமைப்புகள் கூஸ்பம்ப் மொமென்ட்ஸ்கள் மற்றும் ராவான அழுத்தம் நிறைந்த காட்சிகள் என தனக்கே உரித்தான விஷயங்களை இந்தப் படத்திலும் கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வரும் சூரி தனது இரண்டாவது இன்னிங்ஸை இப்படத்தின் மூலம் ஸ்டார்ட் செய்துள்ளார். பல இடங்களில் இவரின் அனுதாபமான நடிப்பும், ஐயோ பாவம் போன்ற முக பாவனைகளும், போலீசாரிடம் எந்த சூழ்நிலையிலும் நியாயத்திற்காகவே போராடும் அழுத்தமான குணத்தையும் காட்டி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார். தன் கரியரிலேயே சிறப்பான படமாக சூரிக்கு இப்படம் அமைந்திருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நாயகி பவானி ஸ்ரீ.

மக்கள் படை இயக்கத்தின் தலைவனாக வரும் வாத்தியார் விஜய் சேதுபதி சில காட்சிகளே வந்தாலும் தியேட்டரில் விசில்களைப் பறக்கச் செய்கிறார். இவருடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இப்படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது. டிஎஸ்பியாக நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் வழக்கம் போல் தனது ட்ரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார்.

இளையராஜாவின் பாடல்கள் கேட்க இனிமை, பின்னணி இசை படத்திற்கு பலம். வேல்ராஜ் ஒளிப்பதிவு சிறப்பு. மலைப்பகுதிகளில் கேமராவை கையாடுள்ள விதமும், லாக்கப் குள் கையாண்ட விதமும் பிரமாதம். எடிட்டிங் படத்தின் கதையை அழகாக எடுத்து சொல்கிறது. ஆக்ஷன் காட்சிகள் வடிவமைத்த விதம் சூப்பர்.

விடுதலை – வெற்றி