பத்து தல ; விமர்சனம்

2017 ஆம் ஆண்டு சிவ ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆக வெளியாகி உள்ளது எஸ்.டி.ஆரின் பத்து தல. கன்னடத்தில் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது போல் தமிழிலும் வரவேற்பைப் பெற்றதா?

கன்னியாகுமரியில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் ஏஜிஆர் சிம்பு தமிழ்நாட்டின் அரசியலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் நபரையே முதலமைச்சர் ஆக்கும் பவரில் இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை கடத்தி விடுகிறார். இதை கண்டுபிடிக்க அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் சிம்புவிடம் அடியாளாக வேலை செய்கிறார்.

போன இடத்தில் காணாமல் போன முதலமைச்சரை போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் கண்டுபிடித்தாரா இல்லையா? சிம்பு ஏன் முதலமைச்சரை கடத்த வேண்டும்? சிம்புவிடம் கௌதம் கார்த்திக் பிடிபட்டாரா? இல்லையா? சிம்புவின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக உருவாகியுள்ளது பத்து தல திரைப்படம்.

ஏ.ஜி. ராவணனாக வரும் சிலம்பரசன் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.கன்னடத்தில் இந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்த சிவராஜ்குமார் நடிப்பு மிரட்டல் என்றால், அதை விட ஒரு படி மேலாகவே சிம்பு பத்து தல படத்தில் கலக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்ததாக கவுதம் கார்த்திக், நிதானமான நடிப்பை திரையில் காட்டியுள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைக்கதையின் ஓட்டத்திற்கு முக்கிய காரணமாக தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.

வில்லனாக வரும் கவுதம் மேனன் நடிப்பு அசத்தல். அரசியல்வாதியின் ஆசை எப்படி இருக்கும் அதற்காக அரசியல்வாதி என்ன செய்வார்கள் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தாசில்தாராக வரும் பிரியா பவானி சங்கர் நடையில் ஒரு மிடுக்கும் நடிப்பில் சில பாவனைகளையும் சிறப்பாக கொடுத்துள்ளார். அதேபோல் கல்லூரி மாணவியாக அவர் வரும் போர்ஷனிலும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

இவர்களை தவிர்த்து டிஜே, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி, அனு சித்தாரா, மது குருசாமி, சென்றாயன் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஃபரூக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு பலம்.

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இடைவெளி காட்சியில் இருந்து படம் வேகம் எடுக்கிறது.

மொத்தத்தில் பத்து தல தாராளமாக பார்க்கலாம்.