கே.ஜி.எப், காந்தாரா என தொடர்ந்து வெற்றி படங்களை தந்த கன்னட சினிமாவில் இருந்து அடுத்ததாக வந்துள்ள படம் விஜயானந்த்.
அப்பா வழியாகக் கற்றுக்கொண்ட அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், லாரி வாங்கி, அதைத் தானே ஓட்டி ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர். ஒருலாரியுடன் தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தெடுத்து தனியொரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை.
அதை கமர்சியல் அம்சங்கள் கலந்த சுயசரிதைப் படமாகக் கொடுத்திருக்கிறார் திரைக்கதையை எழுதி, இயக்கியிருக்கும் ரிஷிகா சர்மா.
விஜய் சங்கேஸ்வராக நிஹால் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவரின் மனைவியாக நடித்திருக்கும் சிரி பிரகலாத் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.
படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
வாழ்க்கை வரலாற்றை பேசும் கதையாக இருந்தாலும் அதை அழகாகவும் கச்சிதமாகவும் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.
சூரரைப் போற்று, ராக்கெட்ரிக்கு பின் ஒரு நல்ல சுயசரிதை படம் விஜயானந்த்