டெவில் ; விமர்சனம்


சவரக்கத்தி படத்திற்குப் பிறகு டைரக்டர் மிஷ்கினும் அவரது தம்பி ஆதித்யாவும் இணைந்துள்ள மற்றொரு திரைப்படம் டெவில்.

கணவரின் துரோகத்தால் விரக்தியில் இருக்கும் பூர்ணா, திரிகுணின் திடீர் நட்புடன் பயணிக்கிறார். இவர்களது நட்பின் நெருக்கம் அதிகரிக்கும் போது, பூர்ணா மீது திரிகுணுக்கு காதால் ஏற்படுகிறது. பூர்ணாவும் அவருடைய பரிசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வரும் போது, அவருடைய கணவர் விதார்த் தான் செய்த தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனால், தனது கணவன் மீது காதல் கொள்ளும் பூர்ணாவின் இல்லற வாழ்க்கை இனிமையாக மாறுகிறது. ஆனால், பூர்ணாவை மறக்க முடியாமல் திரிகுண் தவிக்கிறார். அவருடைய தவிப்பு பூர்ணாவின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே ‘டெவில்’ படத்தின் கதை.

தவறு செய்யும் கணவராக முற்றிலும் மாறுபட்ட பெண் மோகம் கொண்ட கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறார். திருமணம் செய்து கொண்டு காதலிக்கும் மனைவிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு மனைவியை உதாசீனப்படுத்தி,காதலியுடன் உல்லாச சல்லாபங்களை செய்வதும், பின்னர் தன் தவறை உணர்ந்து சாஷ்டாங்கமாக மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் தருணத்திலும், மனைவி மேல் சந்தேகப்பட்டு எடுக்கும் விவரீதமாக முடிவால் நடக்கும் சண்டை என்று படத்திற்கு தன் நடிப்பால் வலு சேர்த்துள்ளார்

மொத்த படத்தையும் ஹேமாவாக நடித்து இருக்கும் பூர்ணா தாங்கி சென்றிருக்கிறார். அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பு வியக்கும் வகையில் இருக்கிறது.

காதலும் வில்லத்தனமும் கலந்த கலவையில் ரோஷனாக நடித்திருக்கும் திரிகுன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. சோபியாவாக சுபஸ்ரீ பணம் மாறும் காதலியாக சுகத்திற்காக குணம் மாறும் கவர்ச்சி குவியலாக திமிருடன் அழகுடன் வந்து போகிறார்.

சிறப்பு தோற்றத்தில் மிஷ்கின் பிச்சைக்காரராக ரோட்டில் திரிந்து கொண்டு ஒரு சில காட்சிகளில் வந்து, பின்னர் பூர்ணாவிற்கு கடவுளாக தெரியும் வகையில் நல்ல அறிவுரையை வழங்கி படத்திற்கு திருப்புமுனை கொடுக்க உதவி செய்கிறார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் இரவு நேரக் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்முல் கடத்தி நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மிஷ்கினின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும்படி இருக்கிறது. ஆனால், பின்னணி இசையில் வயலின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் மிஷ்கின் அளவுக்கு அதிகமாக வாசித்திருக்கிறார். அதேசமயம் இரண்டாம் பாதி பின்னணி இசையில் வயலின் வாசிப்பை குறைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.

முக்கோண கள்ளக்காதல், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தான் படத்தின் மையக்கரு என்றாலும், அதை உணர்வுப்பூர்வமாக பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா. குறிப்பாக ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழு படத்தையும் சற்று விறுவிறுப்புடன் கூடிய காதல் கதையாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.

முதல் பாதி முழுவதும் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் விதார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் படம் விரிந்து போக போக பூர்ணா விதார்த் இடையிலான பிரச்சனைகளை விரிவாக பேசி இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸில் படம் முடிகிறது. தம்பதிகளுக்கு அறிவுரை சொல்லும் கதையாக இருந்தாலும், பெண் என்பவள் பொருள் அல்ல, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா