யசோதா ; விமர்சனம்

தமிழ் சினிமாவில் நாயகிகளை முன்னிறுத்தி பிரமாண்டமாக வெளிவரும் படங்களின் எண்ணிக்கை சொற்பமே, அவற்றுள் ஒன்றாக சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள படம் யசோதா.

படத்தில் சமந்தா அவர்கள் பண தேவைக்காக வாடகை தாயாக மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு சமந்தாவைப் போல பல பெண்கள் இருக்கின்றனர். மருத்துவமனையில் வாடகை தாயாக வரும் பெண்களை அவர்கள் வேறு ஏதோ தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உண்மை சமந்தாவிற்கு தெரிய வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் சதி திட்டங்களை கண்டுபிடிக்க சமந்தா முயற்சிக்கிறார். இறுதியில் சதித்திட்டங்களை சமந்தா முறியடித்தாரா? சமந்தாவிற்கு என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தை சமந்தா தான் தாங்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். முதல் பாதியில் வாடகை தாயாக வரும் அப்பாவி பெண் சமந்தா, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு, சில இடங்களில் அவர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கின்றன. சண்டைக் காட்சிகளில் சமந்தாவின் ஆக்ஷன் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. இன்பம்,அழுகை, ஏமாற்றம்,பாசம்,கோவம், சண்டை என நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் அழகாக வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளுகிறார் சமந்தா. இரண்டாம் பாதியில், சமந்தா உண்மையில் யார்? என்று வெளிப்படும் காட்சிகளில் ரசிகர்களின் விசிலும், ஆரவாரமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இவரை அடுத்து படத்தில் வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் உன்னி முகுந்தன், சம்பத், முரளி ஷர்மா, ராவ் ரமேஷ் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இந்த படத்திற்காக பல மெனக்கட்டு இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
படம் முழுக்க முழுக்க எமோஷனல், திரில்லர் பாணியில் சென்று கொண்டிருக்கின்றது. அதிலும் இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் எல்லாம் சூப்பர்.

ஒரு சாதாரண படமாக தொடங்கினாலும், காட்சிகள் செல்ல செல்ல விறுவிறுப்பின் வேகம் அதிகரித்து, மர்மங்கள் நிறைந்த இடைவேளை வரும்போது இது ஒரு “சாதாரண படம் அல்ல” என்று தோன்றும் அளவிற்கு சிறப்பாக முடிகிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளும் அவிழும் போது படபடப்பையும், எதிர்பார்ப்பையும் எகிற வைக்கிறது.

மொத்தத்தில் யசோதா அனைவரும் பார்க்க வேண்டிய படம்.