அஜித்தை பிடித்து ஆட்டும் ‘தல’ விளம்பர வெறி..!

குழந்தை பிறந்ததும் பேர் வைக்காமல் பள்ளிக்கூடம் கொண்டுபோய் சேர்க்கும்போது பேர் வைக்கும் ஆட்களை பார்த்திருக்கிறீர்களா..? அப்படி ஒரு ஆள் தான் நம்ம அஜித். எந்தப்படம் ஆரம்பித்தாலும் உடனே பேர் வைக்காமல், படம் ரிலீசுக்கு பத்து நாளைக்கு முன்னாடி, ஏதோ ஒரு டைட்டிலை வைத்து ஒப்பேத்துறதுன்னு, கிட்டத்தட்ட ‘ஆரம்பம்’ படத்தில் ஆரம்பித்தது இந்த கூத்து.

தல-54, தல-55, தல-56, என வரிசையாக ஒரே ‘தல’ மாயம் தான்.. இப்படி தன்னோட படங்களுக்கு நம்பர்களை டைட்டிலாக வைப்பது கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே இவருக்கு வாடிக்கையாகி விட்டது. படத்திற்கு பெயர் வைத்து விட்டால் ‘தல’ (தல எனும் வார்த்தை) புராணம் இல்லாமல் போய் விடுமே என்ற ஒரே காரணத்திற்காக படம் ரிலிசை நெருங்கும் வரை படத்திற்கு பெயர் வைக்காமல் ரசிகர்களை ‘தல’ புகழ் பட வைத்து ஆனந்தம் அடைகிறார். அந்த வகையில் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்கு ‘தல-56’.

இருக்கட்டும்.. விஜய் கூட படம் ஆரம்பித்து கொஞ்சநாளில் டைட்டிலை சொல்லி விடுகிறாரே.. அட. நம்ம சூப்பர்ஸ்டாரை பாருங்கள். படத்திற்கு ‘கபாலி’ என டைட்டிலையும் முன்கூட்டியே அறிவித்துவிட்டு, அழகாக பூஜை போட்டுவிட்டுத்தானே, ஷூட்டிங்கிற்கே கிளம்பியுள்ளார்… அதுதானே முறையும் கூட. அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார்..!

அப்படி டைட்டிலை உடனே அறிவிப்பதில் என்ன குடி முழுகிப்போய்விடுகிறது. டைட்டில் வைத்தால் வேறு யாராவது என்னுடைய படத்தின் டைட்டில் என கேஸ் பூட்டு விடுவார்களே என்கிற பயமா…? ‘கபாலி’க்கும் அப்படித்தானே நடந்தது.. ஆனால் பிரச்சனைகளை எல்லாம் சரிக்கட்டி, டைட்டிலை கன்பார்ம் செய்தார்களே, அந்த துணிவில் நூற்றில் ஒரு பங்கு கூட அஜீத்துக்கும் இல்லை.. அஜீத்தை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கும் இல்லைபோல தெரிகிறது..

இல்லை.. கதையைத்தான் எங்கிருந்தாவது சுட்டு விடுகிறோம், ஆனால் டைட்டிலை எங்கே போய் சுடுவது என்கிற குழப்பமா..? இப்போது இதில் இன்னொரு ஸ்டண்ட்டாக, இந்த தல-56’ படத்திற்கு விஜய்யின் ‘புலி’ படம் ரிலீசாகும் நாளில் டைட்டிலை அறிவிக்கப்போவதாக முடிவு செய்திருக்கிறார்களாம்.. அதுகூட ரிலீஸ் நாளன்று செய்திகளில் ‘புலி’ படத்தை பற்றிய வீரியத்தை பங்கு போட்டு, தன்னுடைய படத்தின் பெயரே சோஷியல் மீடியாவில் எதிரொலிக்கவேண்டும் என்கிற இன்னொரு வகையான விளம்பர வெறி தான்.

நல்ல நிகழ்வோ, துக்க நிகழ்வோ அதற்கு விஜய் வந்தார் என பேசுவதை விட, அஜித் வரவில்லை என வராத ஆட்களை பற்றித்தானே பேசுவது வழக்கம்.. அந்த விளம்பரம் தான் இவருக்கு வேண்டும். ஆனால் விளம்பரத்தை விரும்புவதில்லை, பந்தாவை விரும்புவதில்லை என சொல்லிக்கொண்டே அவர் பண்ணும் அந்த அத்தனை விஷயங்களும் எங்கேயும் தன்னைப்பற்றியே எல்லோரும் பேசவேண்டும் என அவருக்குள் மறைந்து கிடக்கும் விளம்பர வெறியைத்தானே காட்டுகின்றன.

ஒரு சாதாரண அப்புக்குட்டியை வரவழைத்து போட்டோ எடுக்கவும், ஸ்ருதிஹாசனை வைத்து போட்டோ எடுக்கவும் இவரால் நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால் திரையுலகின் மூத்த ஜாம்பவான்களான, நமது தமிழ் சினிமாவின் பெருமையை ஒருபடி உயர்த்திய, கமல், ரஜினி என்கிற இரு சூப்பர்ஸ்டார்களும் தலைவணங்குகின்ற, பாலுமகேந்திரா, இயக்குனர் சிகரம் பாலசந்தர், சமீபத்தில் காலமான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என ஒருவருடைய மரணத்திற்கு கூட இறுதி மரியாதை செலுத்த இந்த ‘அஜித்’ வரவில்லையே.. இதுவும் கூட ஒரு விளம்பரம் தான்..

திரையுலகை சேர்ந்த ஒருவரது துக்க நிகழ்வில் ஊரே கலந்துகொள்ளும்போது அஜித் மட்டும் கலந்துகொள்ளவில்லை என்றால் இவரை எந்தவிதத்தில் சேர்ப்பது..? சமூக வலைதளங்களும் மீடியாக்களும் அஜித்தின் இந்த போக்கை எளிமை என புகழாரம் சூட்டி அழகு பார்க்கிறது.

விளம்பர படங்களில் நடித்து மக்களை ஏமாற்றும் வேலையை செய்யாமல் இருக்கிறார். ஓட்டுப்போட மக்களுடன் மக்களாக வரிசையில் நிற்கிறார்.. இப்படி தன்னை சமூகத்தில் ஒரு சாதாரண மனிதனாக அவர் முன்னிறுத்துவது எல்லாமே அக்மார்க் ‘தல’ மார்க்கெட்டிங் பிசினஸ் தான்.

என்று தணியும் இந்த ‘தல’ விளம்பர மோகம்..?