நடிகை மீனாவுக்கு புதிய பட்டம் – எவர்க்ரீன் ஸ்டார் !


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. சினிமாவில் இருந்து விலகிய பின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த மீனா தற்போது “கரோலின் காமாட்சி” என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அந்த தொடரின் போஸ்டரில் மீனாவுக்கு எவர்க்ரீன் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்துள்ளனர்.

அந்த வெப் சீரிஸின் இயக்குநர் வெர்னிக் கூறியதாவது

“அவங்களோட அனுபவத்துக்கு இந்த பட்டம் எல்லாம் சாதாரணம்னுதான் நினைக்கிறேன்.
அதனாலதான் வெப் சீரிஸ் என்ட்ரியில அவங்களை கவுரவப்படுத்தற மாதிரி ஒரு பட்டம் கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். பல பட்டங்களை சூட்டி பார்த்து கடைசியில `எவர்க்ரீன் ஸ்டார்’ பட்டத்தை தேர்வு செய்தோம். ஆனா, இந்த பட்டத்துக்கு அவங்ககிட்ட சம்மதம் வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.
முதல் தடவையா பட்டம் குறித்து அவங்ககிட்ட சொன்னதும் சத்தமாக சிரிச்சிட்டாங்க. ’இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? சினிமாவுல கடைசிவரை இருக்கிறவங்கதான் இப்படியெல்லாம் போட்டுக்கணும்… ரஜினி, கமல் சார் காதுலெல்லாம் இந்தப் பட்டம் விழுந்தா அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு எங்களையே கேட்டுச் சிரிக்கிறாங்க. ஆனாலும் நாங்க தொடர்ந்து வற்புறுத்தியதால கடைசியில சம்மதம் கொடுத்தார்” என்றார்.

முப்பது வருடங்களாக சினிமாவில் நடித்த போது டைட்டில் கார்டில் பட்டம் எதுவும் போட்டுக் கொள்ளாத நடிகை மீனா தற்போது வெப்சீரிஸ் மூலம் பெயருக்கு முன் அடைமொழி கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இனிமே நடிகை மீனா, எவர்க்ரீன் ஸ்டார் மீனா !