“சாண் ஏறினால் மீட்டர் கணக்கில் சறுக்குகிறதே” – புலம்பும் சித்தார்த்…!


“என்னதான் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நிலையான ஒரு இடத்தைப் பிடித்தாலும் நான் பிறந்த என் சொந்த ஊரான தமிழ்நாட்டில் என்னால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது” என்று சித்தார்த் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியின்போது வருத்தத்துடன் சொன்னார்..

அதே உத்வேகத்துடன் களம் இறங்கினார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழ்த்திரையுலகில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த சித்தார்த்துக்கு சுந்தர்சி.யின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் நல்ல ரெஸ்பான்சை கொடுக்க, அதற்கடுத்து வெளியான ‘ஜிகர்தண்டா’ அவரது தமிழ்க்கனவை கொஞ்சம் நனவாக்கியது என்றே சொல்லலாம்.

அதனால் முன்னைவிட இன்னும் முனைப்புடன் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சித்தார்த். ஆனால் அவர் நடித்த காவியத்தலைவன் படு தோல்வி அடைந்தது.. அவரது புதிய முயற்சியான ‘எனக்குள் ஒருவன்’ படமும் அவரை கைவிட்டது.. அரண்மனை-2 ஓரளவு வெற்றி பெற்றாலும் அதில் சித்தார்த்தின் பங்கு பெரிதாக இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் அவரது சொந்த தயாரிப்பாக வெளியான ‘ஜில் ஜங் ஜக்’ படம் புதிய முயற்சி என்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்கு இது என்ன படம், என்ன கதை என்பதே புரியாமல் போனது. சாண் ஏறினால் மீட்டர் கணக்கில் சறுக்குகிறதே என புலம்பும் சித்தார்த் சமீபத்திய தனது படத்திற்காக கோசம் அதிகபடியாகவே உழைத்து விட்டாராம். அதனால் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம். அதன்பிறகு தான் அடுத்த படத்தை பற்றி முடிவு செய்வாராம்.