நேட்டி விட்டிசினிமா, யதார்த்த சினிமா, ஆக்சன் சினிமா, பெரிய நடிகர்கள் சினிமா ன்னு போகிற போக்கில் வளர்ந்து வரும்? இன்னும் கொஞ்சம் சொல்லனும்னா கொரியன் காப்பி சினிமா வரைக்கும் சக்கை போடு போடும் தமிழ்சினிமாவை பார்த்து பழகிய ரசிகர்களை “இப்படித்தான் ரொம்ப காலமாக இருக்கிறது எங்க ஏரியா … கொஞ்சம் எங்க ஏரியாவுக்கும் வந்து பாருங்கப்பா” என்று அழைத்து சென்று வட சென்னையின் தெருக்களில் நம்மை வாழ வைத்திருக்கும் படம் தான் “மெட்ராஸ்”.
காளி, அன்பு என்று இரு நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு சுவரால் ஏற்படும் அரசியல் பிரச்சினை, கொலை, பழிவாங்கல்தான் மெட்ராஸ் படத்தின் கதை.. வட சென்னையின் யதார்த்த மனிதர்களின் வீடு, வாழ்க்கை, விளையாட்டு, திறமை, காதல், அன்பு, வன்மம், அரசியல் என்று பயணிக்கும் படத்தை உண்மைத்தன்மையோடு மிக அழகாக படம் பிடித்து இருக்கிறார் ரஞ்சித்..
ஒரு வாழ்வியல் சார்ந்த படங்களுக்கு எப்பொழுதும் கதையை விட கதாபாத்திரங்கள் மிக முக்கியம் என்பதை அறிந்து கதாபாத்திரங்களை கன கச்சிதமாக தேர்ந்தெடுத்திருப்பதில் ரஞ்சித் மிக ஆச்சர்ய பட வைக்கிறார் .
கண்டிப்பாக இந்தப்படம் கார்த்தி க்கு ஒரு ஸ்பெசல் படம்தான், அப்படியே ஒட்டி விடுகிறார். யதார்த்தமான பக்கத்துவீட்டு பையனாகவும் , நண்பனுக்காக கோபப்படும் இடங்களிலும் வாழ்ந்திருக்கிறார்.
நாயகி கேத்ரின் தெரசா “நீதான் வோணும், கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று சொல்லும்போதும், உனக்கு என்னை பிடிக்குமா இல்லை உன் நண்பனை பிடிக்குமா என்று கேட்கிற இடங்களில் மனதில் நிற்கிறார் .
அன்புவாக நடித்திருக்கும் கலையரசன். மேரியாக நடித்திருக்கும் ரித்விகா நிஜ வட சென்னையின் தம்பதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் .
இந்த படத்தில் மிக முக்கியமாக மன நிலை சரியில்லாதவராக ஜானி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரின் உடல் மொழி முதல் வசனங்கள் வரை இயக்குனரின் மெனக்கெடலுக்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு .
அரசியல் வாதிகளால் குடிசை வாழ் மக்கள் எப்படி ஏமாற்றபடுகிறார்கள், அவர்களின் உணர்வுகள் எப்படி அரசியலாக்கப்படுகிறது என்பதை அரசியல் கலந்து ரசனை மிக்க சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
“மெட்ராஸ்” நம்ம படம்.