மலையாள ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரேம்ஜி அமரன்..!

மலையாள ரசிகர்கள் பொதுவான பிரச்சனை என்றால் ஒன்றுகூடி விடுவார்கள். அப்படி கூடிவிட்டால் எதிரில் இருப்பவர்கள் யாரென்றெல்லாம் பார்க்கமாட்டார்கள் என சிலர் சொல்லி கேள்விப்பட்டதுண்டு. ஆனால் காமெடி நடிகர் பிரேம்ஜி அவர்களிடம் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்ட கதையை பார்க்கும்போது அது உண்மைதானோ என தோன்றுகிறது.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கேரளா அரசு மதுக்கடை பார்களை சீல் வைப்பது குறித்து பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி, ஒரு படத்துடன் மலையாளிகளை பற்றிய சில கிண்டலான வரிகளையும் சேர்த்து பதிவிட்டிருந்தார் பிரேம்ஜி. மலையாளிகளின் கவனத்துக்கு இது போக விடுவார்களா அவர்கள்..? டிவிட்டரில் உடனே தாக்குதலை தொடங்கிவிட்டார்கள் அவர்கள்.

மங்காத்தா படம் மூலமாக கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பாப்புலரான பிரேம்ஜி அமரன், கேரளத்துக்காரர்களின் இந்த கொந்தளிப்பை எதிர்பார்க்கவில்லை. உடனே தான் பதிவிட்டிருந்த ட்வீட்டை டெலிட் செய்ததோடு, சும்மா காமெடிக்காகத்தான் செய்தே.. வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்றும் பதில் போட்டார்.

ஆனாலும் எதிர்ப்பு கணைகள் தொடரவே, அந்த ட்வீட்டை தான் போடவில்லை என்றும், தன்னுடைய ரசிகர்களில் யாரோ ஒருவர் அவ்வாறு செய்துவிட்டதாகவும் பழியை தூக்கி ரசிகர்கள் தலையில் போட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, இதனால் மலையாளிகளின் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாக சமீபத்தில் கிளப் எப்.எம்மில் பால்கனி என்கிற புரோகிராமில் கலந்துகொண்டபோது அளித்த பேட்டியிலும் தெரிவித்துக்கொண்டார். மேலும் மலையாள ரசிகர்கள் வழக்கம்போல தங்களது ஆதரவை தான் நடித்து வரும் படங்களுக்கு தொடர்ந்து தருமாறும் கும்பிடு போடாத குறையாக கேட்டுக்கொண்டுள்ளார்.

என்ன கொடுமை சார் இது..?