ஒரு படம் கூட நடிக்காத ராதிகாவின் மகளை ஆயுட்கால உறுப்பினராக்கிய சரத்குமார்..!

சரத்குமார் நடிகர்சங்க தலைவராக இருப்பதால், அவரால் தன்னிச்சையாக என்னென்ன செய்ய முடியும் என இப்போது வெளியாகியுள்ள நடிகர்சங்கத்தின் புதிய உறுப்பினர் பட்டியல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பே ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் ரயான். இதுவரை இவர் ஒரு படம் கூட நடித்ததில்லை.. அவ்வளவு ஏன்.. இவரை சினிமா விழாக்களில் கூட அதிகமாக யாரும் பார்த்திருக்க முடியாது.

ஆனால் இவரை நடிகர்சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக்கி அழகு பார்த்திருக்கிறார் சரத்குமார்.. தலைவர் பதவியில் இருந்தால் எதுவும் சாத்தியம் தானே..? ஒருவேளை பின்னாளில் பென்சனுக்கு பயன்படுமே என நினைத்து இதைச்செய்திருப்பாரோ தெரியவில்லை.

ஆனால் இதைவிட இவர் செய்த இன்னொரு வேலைதான் சரத்குமாருக்கு தேவையில்லாத சிக்கலை கொண்டுவரப்போகிறது.. அதாவது கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இப்போது நடிகர்சங்க உறுப்பினர்கள் தான்.. ஆனால் இதில் கலைஞர் பெயரை மட்டும் தொழில் இல்லாத ஆயுட்கால உறுப்பினராக மாற்றியுள்ளார்கள்..

நிச்சயம் சரத்குமார் அல்லது ராதாரவியின் அனுமதி இல்லாமலோ, அல்லது அவர்கள் வற்புறுத்தாமலோ இது நடந்திருக்காது.. ஏற்கனவே வாய் நிறைய அவலை மென்றுகொண்டிருக்கும் விஷால் அணியினர், அதை துப்பிவிட்டு இப்போது மெல்வதற்கு புது அவல் கொடுத்துள்ளது சரத்குமார் தரப்பு.. அதுமட்டுமல்ல, கலைஞர் தரப்பிலிருந்து இதற்கு என்னவிதமான எதிர்ப்பு வரப்போகிறதோ என்பதும் தெரியவில்லை.