மேடையில் பாயும் புலி ; போராட்டத்தில் பதுங்கும் எலி


காவிரிப் பிரச்னை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையை மையமாக வைத்து, தமிழ் திரையுலகினர் கடந்த சில நாட்களுக்கு முன், மவுன போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தமிழகம் என்பது தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது; இங்கிருக்கும் மற்றவர்கள் வெளியேற வேண்டும்; வெளியேற்றப்பட வேண்டும் என்று காட்டமாக பேசினார்

மேலும் காவிரி பிரச்னையை தீர்க்காமல், சென்னையில் ஐ.பி.எல்., போட்டியை நடத்தினால், அதைத் தடுப்போம். ராணுவமே வந்தாலும், அதை எதிர்ப்போம் என்று கூறிய நடிகர் சத்யராஜ், சென்னையில் ஐ.பி.எல்., போட்டி துவங்கிய போது, சேப்பாக்கம் பக்கமே வரவில்லை… இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், வி.சேகர் போன்றவர்கள் சேப்பாக்கம் பக்கம் வந்து போராடிக்கொண்டு இருக்க, ராணுவம் வந்தாலும் எதிர்ப்போம் என கூறிய சத்யராஜ், அந்தப்பக்கமே காணவில்லை என்றதும், சினிமா நடிகர்கள் பலரும் அவர் மீது கடும் கோபம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் வீட்டுக்கு வருமான வரித்துறையினர், சோதனைக்காக சென்றனராம். அதைத் தொடர்ந்து பேசிய சத்யராஜ், நான் அப்பா கேரக்டரில் நடிக்கும் ஒரு சாதாரண நடிகன். என் வீட்டுக்கெல்லாம் எதற்காக வருமானவரி துறையினர் சோதனைக்கு வருகின்றனர் என்றே தெரியவில்லை. தமிழகம் என்பது எல்லா மாநிலத்தவரையும் உள்ளடக்கிய ஒரு மாநிலம். இங்கு எல்லா மாநிலத்தவரும், மொழி பேசுவரும் இருக்கலாம் என்று, முன் பேசியதற்கு நேர் மாறாக பேசினாராம். இதையடுத்து, சத்யராஜின் தமிழ் மொழிப்பற்று இதுதானா என்று, சமூக வலைதளங்களில் பலரும் அவரை வறுத்தெடுக்கின்றனர்.