ஹீரோக்களின் வயிற்றில் புளியை கரைக்கும் திருப்பூர் சுப்பிரமணியன் திட்டம்..!


தமிழ் சினிமாவில் சமீபமாக வெளியாகும் படங்களை ஓட வைக்க ‛‛வசூல் மழை‛‛, ‛‛பாக்ஸ் ஆபிஸ் ஹிட்‛‛ என தயாரிப்பாளர்கள் செய்யும் விளம்பரத்தால் அதை உண்மை என நம்பி ஒரிரு படங்கள் மட்டுமே நடித்த நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை பல மடங்குகளாக உயர்த்தி வருகின்றனர்.

ஆனால் உண்மை நிலை தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. ஒரு படம் நடித்த ஹீரோ கூட தனது படம் சுமாராக ஓடியதாக விளம்பரம் ஆனாலே 50 லட்சத்துக்கு குறையாமல் சம்பளம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்.. அடித்த படமும் ஓடிவிட்டால், அவர் கேட்க தேவையில்லை.. அவரை வைத்து படம் எடுக்க வருபவர்களே விபரம் தெரியாமல் ஒரு கோடி இரண்டு கோடி என சம்பளத்தை ஏற்றி விடுகின்றனர்.

இதனால் பல தயாரிப்பாளர்கள் ஒரிரு படங்கள் மட்டுமே தயாரித்து விட்டு அட்ரஸ் இல்லாமல் போகின்றனர். ஆனால் நடிகர்களின் முந்தைய படம் என்ன வசூல் செய்துள்ளது என்கிற உண்மை நிலவரம் வெளியே தெரிந்துவிட்டால்..? அவர்களால் இஷ்டப்படி சம்பளம் கேட்க முடியாதல்லவா..? அப்படி ஒரு திட்டத்தட்டத்தை அதிரடிக்கு பெயர்போன விநியோகஸ்தர் சங்க தலைவரான சுப்பிரமணி கொண்டுவர தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவுக்கு ஆலோசனை கூறியுள்ளார் அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

அதன்படி இனி ஒவ்வொரு மாதமும் கூடும் பெடரேஷன் மீட்டிங்கில் அந்தந்த மாதம் ரிலீஸ் ஆன படங்களின் வசூல் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், முதலீட்டிலிருந்து எத்தனை சதவீதம் வசூல், எத்தனை சதவீதம் லாபம் அல்லது நஷ்டம், என தெரிவிக்க வேண்டும், இதன் மூலம் உண்மை நிலை வெளியுலகிற்கு தெரியவரும் என்பதுதான் சுப்பிரமணியனின் திட்டம். இந்த தகவல் வெளியானத்தில் இருந்து இரண்டாம் நிலை நடிகர்களில் இருந்து சில்லுண்டி நடிகர்கள் வரை அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்களாம்.