தமிழ்த்திரையுலகில் மார்ச் 1-ந்தேதி முதல் ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் புதிய படங்களின் ரிலீஸ் மட்டுமின்றி, படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு, ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட பிறகும் சிறப்பு அனுமதியுடன் சில தினங்கள் நடத்தப்பட்டது.
அதை காரணம் காட்டி விஜய் சேதுபதியின் ஜூங்கா படப்பிடிப்பை நடத்த போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்றதாக புகார்கள் எழுந்தன. தற்போதுவரை அவர்கள் படப்பிடிப்பையும் நடத்திக்கெண்டிருக்கிறார்கள். ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்த தயாரிப்பாளர்களோ, அவருக்கு மட்டும் தனி சட்டமா? அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்காதா? என கொந்தளிக்கின்றனர்.
ஆனால் நிஜத்தில் நடந்ததே வேறு என்கிறார்கள் ஜுங்கா படக்குழுவினர் தரப்பில். போர்ச்சுகீசியாவில் படப்பிடிப்பு நடத்த முன் அனுமதி, விசா எல்லாவற்றுக்கும் பணம் கட்டிவிட்டார்களாம். இவர்கள் திட்டப்படி மார்ச்-10 ந் தேதி விசா கிடைத்துவிடும் என்பதால் தயாரிப்பாளர் சங்கம் கெடு விதித்த மார்ச் 23 க்குள் திரும்பிவிடலாம் என கணக்கு போட்டுள்ளனர். ஆனால் இவர்களின் போதாத நேரம், விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, மார்ச்-16 ந் தேதிதான் கிடைத்ததாம். இந்த பயணத்தை விட்டுவிட்டால் மறுபடி அனைவரையும் ஒன்றிணைத்து குரூப் விசா எடுப்பதில் சிக்கல் வரும் என்பதால், இதுபற்றி விளக்கமாக சங்க தலைமைக்கு தெரிவித்துவிட்டுதான் கிளம்பினார்களாம்.
ஆனால் இவர்களைப்போலவே ஏற்கனவே படப்பிடிப்புக்கு அவுட்டோர் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்து, பின்னர் அதை கேன்சல் செய்த மற்ற தயாரிப்பாளர்கள், தடையை மீறி படப்பிடிப்பு நடத்தி வரும் விஜய் சேதுபதி படக்குழு மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலத்த குரல் எழுப்பி வருகிறார்களாம்