பிருத்விராஜ் நடித்த ‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர்

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!

இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சர்வைவல் அட்வென்ச்சர் படமான ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் 28 மார்ச் 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

‘தி கோட் லைஃப்- ஆடு ஜீவிதம்’ படத்திற்காக இதுவரை சமூக ஊடகங்களில் வெளியான போஸ்டர்கள், வீடியோக்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நிச்சயம் கவரும் திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் நீண்ட காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரமிப்பைத் தூண்டும் இந்தக் கதை, நஜீப்பின் நிஜ வாழ்க்கையைத் தேடும் இன்னல்கள் நிறைந்த அவரது பயணத்தைச் சுற்றி வருகிறது. பிருத்விராஜ் சுகுமாரனின் பிரமிக்க வைக்கும் மாற்றம், பல்வேறு தோற்றங்கள், பரந்த பாலைவனத்தின் அற்புதமான காட்சிகளுடன், இந்தப் படத்தின் டிரெய்லர் நமக்கு அழகான ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.

டிரெய்லர் மற்றும் படத்தைப் பற்றி இயக்குநர் ப்ளெஸ்ஸி பேசுகையில், “என்னைப் பொருத்தவரை இந்தப் படம் மிகப் பெரிய உயிர்வாழும் சாகசமாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். ஏனென்றால் நம்பமுடியாத ஒன்று உண்மையில் ஒருவருக்கு நடந்தது. புனைகதையை விட உண்மை எப்போதும் விசித்திரமாக இருக்கும். உண்மையில், நாவலின் டேக்லைனான ‘நாம் வாழாத வாழ்க்கை அனைத்தும் நமக்கு கட்டுக்கதைகள்’ என்பதுதான் படத்தின் ஆன்மாவும். படத்திற்காக கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகிவிட்டது. ஆனால்,
ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தியை உருவாக்க செலவிட்டதில் பாதி நேரத்தை நான் செலவிட்டேன். அது பெரிய விஷயமல்ல. பார்வையாளர்களுக்கு படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்”.

படம் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பிருத்விராஜ் சுகுமாரன், “இது ஒரு நீண்ட பயணம் மற்றும் எளிதான ஒன்றல்ல. பத்துவருட கால காத்திருப்புக்குப் பிறகு, எங்கள் கடின உழைப்பின் பலனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். கோவிட் நாட்களில் இருந்து இன்று வரை, இந்தப் படம் ஒரு எதிர்பாராத மற்றும் மறக்க முடியாத பயணமாக உள்ளது. ப்ளெஸ்ஸி சார் அவர்களின் பார்வையில் ஒரு பகுதியாக இருப்பதும், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஒரு மேஸ்ட்ரோ, இசையை உயிர்ப்பிப்பதைப் பார்ப்பதும் எனக்கு ஒரு மரியாதை. ‘தி கோட் லைஃப்- ஆடு ஜீவிதம்’ நமக்கு ஒரு திரைப்படம் என்பதை விட, இது நம் இதயங்களைத் தொட்ட ஒரு கதை. இது எப்போதும் நம்முடன் இருக்கும். பார்வையாளர்களும் அவ்வாறே உணருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் 28 மார்ச், 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.