ஐரா- விமர்சனம்


நயன்தாரா நடிப்பில் ஹாரர் திரில்லராக வெளியாகியுள்ள படம் ஐரா. இந்த படத்தில் சிறப்பே நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது தான்.

சென்னையில் பிரபல பத்திரிக்கையில் வேலை பார்க்கும் யமுனா (நயன்தாரா) தனது பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்துவதால் அதை தவிர்ப்பதற்காக தனது பாட்டி ஊரான பொள்ளாச்சிக்கு செல்கிறார். சென்ற இடத்தில் அங்கே இருக்கும் யோகிபாபுவுடன் சேர்ந்து கொண்டு, பேய் சம்பந்தப்பட்ட வீடியோக்களாக உருவாக்கி அதை யூடியூபில் போட்டு பிரபலமாகிறார். அதேசமயம் அவரது வீட்டில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதையும் உணர்கிறார் நயன்தாரா. எதனால் அது நடக்கிறது என்பதை அவர் தெரிந்து கொள்ளும் முன்பே அவரும் அவரது பாட்டியும் அமானுஷ்ய சக்தியால் தாக்கப்படுகின்றனர்.

இன்னொரு பக்கம் கலையரசன் தனது காதலி மரணம் தொடர்பாக சந்தேகப்படும் நபர் மீது புகாரளிக்க செல்ல, அந்த நபர் மற்றும் இவர் தேடிச் செல்லும் சில நபர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறக்கிறார்கள். இந்தநிலையில் தான் இறந்துபோன தனது காதலி பவானி (அதுவும் இன்னொரு நயன்தாராதான்) தான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்று கலையரசனுக்கு தெரியவருகிறது.

அதேபோல தனது பாட்டி மரணத்தைத் தொடர்ந்து தனக்கான மரணத்திற்கும் காரணமாக இருக்கப்போவது இதே பவானி தான் என்று யமுனா (நயன்தாரா)விற்கும் தெரியவருகிறது.. பவானிக்கு என்ன நடந்தது..? எதற்காக இத்தனை கொலைகள்..? இதில் பவானியை போலவே இருக்கும் நயன்தாராவையும் கொலை செய்ய பவானி துடிப்பது ஏன் என்கிற பல கேள்விகளுக்கு மீதிப்படம் விடை சொல்கிறது

இரண்டு வேடங்களில் ஒன்றில் வழக்கமான கலகல துறுதுறு நயன்தாரா.. இன்னொருவர் நாம் எதிர்பாராத ஒரு புது கதாபாத்திரம்.. இரண்டாவது கதாபாத்திரத்தில் கருப்பான முக அழகுடன் வந்தாலும் தனது வித்தியாசமான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார் நயன்தாரா. குறிப்பாக கிளைமாக்ஸில் இரண்டு நயன்தாராக்களும் பேசிக்கொள்ளும் உணர்ச்சிகரமான காட்சி இவரின் மாறுபட்ட நடிப்பிற்கு செமத்தியான தீனி போட்டிருக்கிறது.

கதையின் நாயகன் என்றாலும் இந்தப்படத்தில் படம் முழுவதும் வரும் அழுத்தமான கதாபாத்திரத்தில் கலையரசன் மிளிர்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக் காட்சிகளில் அவரது கதாபாத்திர உருவாக்கம் சிறப்பு.

யோகிபாபு, நயன்தாராவுடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கலகலப்பை ஏற்படுத்த முயற்சித்தாலும் முந்தைய அவர்களது காம்பினேஷனில் வெளியான காமெடியை ஓவர்டேக் பண்ண முடியவில்லை என்பதே உண்மை. கண் தெரியாத பாட்டியாக குலப்புள்ளி லீலாவும் அருமையான நடிப்பு.

ஃப்ளாஷ்பேக் காட்சிகளை முழுவதுமாக கருப்பு வெள்ளையிலேயே காட்டியிருக்கும் சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு சபாஷ் சொல்ல வைக்கிறது. ஹாரர் படங்களுக்கே உரித்தான பின்னணி இசையை இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி ஓரளவுக்கு நிறைவாக தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் சில காட்சிகளில் நமக்கு பயம் வர மறுக்கிறது.

ஒரு நிமிடம் முன்னாடி கிளம்பி இருந்தால் என நம்மில் பலர் பல விஷயங்களுக்காக அடிக்கடி சொல்வதுண்டு.. அப்படி ஒரு ஒன்லைனை எடுத்துக்கொண்டு அதற்கு ஹாரர் பின்னணி கொடுத்து, இந்த படத்திற்கான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். ஒன்லைனை நாம் பாராட்டினாலும் அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் அதற்கான காரணங்கள், இது நியாயம் தானா என்கிற ஒரு நெருடலை ஏற்படுத்தவே செய்கின்றன.

பவானியின் தரப்பில் அவையெல்லாம் நியாயமாக பட்டாலும் பேய் விஷயத்தில் காரண காரியங்களையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது என நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். முற்பாதி வழக்கமான ஹாரர் படம் போல நகர்ந்தாலும் இரண்டாவது பாதியில் நன்றாகவே வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குனர் சர்ஜுன்.. நயன்தாரா படங்களை ரசிப்பவர்களுக்கும் பேய் படங்களை விரும்புவர்களுக்கும் இது ஒரு சைவ விருந்து என சொல்லலாம்