பிரம்மா டாட் காம் – விமர்சனம்


தனது பிறந்தநாளன்று கோயிலில் அர்ச்சனை செய்யப்போகும் நகுலுக்கு, நடை சாத்தப்போகும் சமயம் என்பதால் பிரம்மன் சந்நிதியில் வைத்து அர்ச்சனை செய்து தரும் அர்ச்சகர் பாக்யராஜ், பிரம்மனிடம் இன்று நீ கேட்டது கிடைக்கும் என கூறுகிறார். அதன்பின் பிரம்மா டாட் காமிலிருந்து பேஸ்புக் ரிக்வெஸ்ட் வர அதை ஒகே செய்கிறார் நகுல்.

இதை தொடர்ந்து நகுலின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரம்மா டாட் காம் மூலம் நகுலின் பேஸ்புக்கில் படமாக பதிவிடப்படுகிறது. பிரம்மன் வேலையை தொடங்கிவிட்டார் என்பதை உணர்கிறார் நகுல். தனது விளம்பர நிறுவனத்தின் விளம்பர மாடலான ஆஷ்னா சவேரியை காதலிக்கும் நகுல், தனது குறைந்த பதவி, வருமானம் காரணமாக அதை சொல்லாமல் ஏற்கனவே தடுமாறும் நிலையில், தான் உயர் பதவிக்கு அதாவது சித்தார்த் விபின் இடத்திற்கு சென்றுவிட்டால் அதைவைத்து ஆஷ்னாவின் காதலை பெறலாம் என முடிவெடுத்து பேஸ்புக் மூலம் பிரம்மா தரும் ஆப்ஷனுக்கு சம்மதிக்கிறார்.

பிரம்மனின் வித்தை மூலமாக, அது நடந்தாலும் கூட ஏற்கனவே ஆஷ்னாவின் தலையில் பிரம்மன் எழுதிவைத்தபடி கீழே இருக்கும் பதவியில் இருப்பவரைத்தானே தானே காதலிக்க வேண்டும்..? அதனால் அவரது காதல் பார்வை சித்தார்த் விபின் பக்கம் திரும்புகிறது. யாருடைய காதலை பெற நகுல் இப்படி ஆசைப்பட்டாரோ அதற்கே இப்போது ஆப்பு வைக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது..

இன்னொரு பக்கம் உயர் பதவியில் இருக்கும் நபர் தான் முதலாளி மொட்ட ராஜேந்திரனின் சுமாரான அழகுள்ள மகளை திருமணம் செய்யவேண்டும் என்கிற ஒப்பந்தம் முன்பே போடப்பட்டு இருப்பது நகுலுக்கு தெரியவர இன்னும் அதிர்ச்சியாகிறார்.

நகுலின் தலையெழுத்து திரும்பவும் மாற்றி எழுதப்பட்டதா..? ஆஷ்னாவின் காதலை அவரால் மீண்டும் பெற முடிந்ததா..? என்பது தான் மீதிப்படம்.

பிறக்கும்போதே நம் தலையில் பிரம்மன் என்ன எழுதி இருக்கிறானோ அதன்படிதான் அனைத்தும் நடக்கும்.. ஒருவேளை அதை நம் விருப்பத்துக்கு மாற்ற நினைத்தால் என்ன நடக்கும்..? பிரம்மா டாட் காம் படம் சொல்ல வருவதும் இதைத்தான்.

நகுலுக்கு தோதான கதை தான். துருதுருவென புகுந்து விளையாடுகிறார் தான்.. ஆனால் அவரது கேரக்டர் வடிவமைப்பில் சற்று சிரத்தை எடுத்திருக்கலோமோ என்றே தோன்றுகிறது. இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவுக்கு அமுல்பேபி சித்தார்த் விபின் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். இசைப்பணியும் அவருடையதே என்றாலும் பெரிதாக கவரவில்லை.

ஆஷ்னா சவேரிக்கு நகுல், சித்தார்த் விபின் இருவரையும் கொஞ்ச கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணவேண்டிய வேலை.. அதை சரியாக செய்திருக்கிறார். நீது சந்திரா நடிகையாகவே சில காட்சிகளில் வந்துபோகிறார். அவ்வளவுதான்.

நகுலின் நண்பராக வரும் ஜெகன், அவரது காதலி இருவரும் அவ்வப்போது சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள் படம் முழுதும் வந்தாலும் மொட்ட ராஜேந்திரனின் கெட்டப்பும் கேரக்டரும். சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.

பேண்டசி கதை என்பதால் திரைக்கதையில் இயக்குனர் புருஷ் விஜயகுமார் இன்னும் சில சில ஜால வித்தைகளை கூட்டி இருக்கலாம். குறிப்பாக மொட்ட ராஜேந்திரன், அவரது மகள் சம்பந்தப்பட்ட எபிசோடுகளை ட்ரிம் பண்ணிவிட்டு காதல் ஏரியாவில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். .