ஹர ஹர மஹாதேவகி – விமர்சனம்


சாவு வீட்டில் இறுதிக்காரியங்களுக்கான ஏ டு இசட் வேலைகளை காண்ட்ராக்ட் ஆக செய்பவர் கௌதம் கார்த்திக். இவருடன் சில பல ‘அய்யே’ காரணங்களால் காதலாகும் நிக்கி கல்ராணி, ஒருகட்டத்தில் கௌதம் கார்த்திக் செயல்களால் வெறுப்பாகி, காதலை பிரேக்கப் பண்ணுகிறார். கௌதம் கார்த்திக் கொடுத்த பரிசுப்பொருட்களை திரும்ப கொடுப்பதாகவும் அதேபோல தான் கொடுத்தவற்றை திருப்பித்தருமாறும் கேட்கிறார்.

இருவரும் திருப்பித்தந்து காதலை பிரேக்கப் செய்தார்களா..? இல்லை உடைந்துபோன காதலை ஓட்டவைத்தார்களா என்பது க்ளைமாக்ஸ். இதற்கிடையே எலெக்சன் மீட்டிங், வெடிகுண்டு வைப்பது, குழந்தை கடத்தல், கள்ள நோட்டு மாற்றுதல், வெடிகுண்டு வைக்கப்பட்ட பேக் ஆளாளுக்கு கை மாறுவது என எக்ஸ்ட்ராவாக சில சங்கதிகளையும் உள்ளே நுழைத்து காமெடி கலாட்டா செய்திருக்கிறார்கள்.

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணியின் இருவரும் சந்திக்கும் காட்சிகள் அண்ணாமலை ரஜினி போலத்தான் கடவுளே கடவுளே காட்சி தான். காதல் காட்சிகளை விட இரட்டை அர்த்த வசனங்கள் தான் அதிகம் இருக்கும். சதீஷ் தன்னுடைய வழக்கமான சிரிப்பே வராத சில காமெடிகளை பயன்படுத்தினாலும் க்ளைமேக்ஸில் வரும் முத்தத்தை திருப்பி தரும் காட்சியில் அப்லாஸ் அள்ளுகிறார்.

மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் காமெடி கூட்டணி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ரவி மரியா, நமோ நாரயணன், மயில்சாமி என ஒவ்வொரு நடிகர்களும் கைத்தட்டல் வாங்குகின்றனர். ஒரு பையால் ஏற்படும் குழப்பத்தை காதல், பிரிவு, நட்பு, காமெடி, கொஞ்சம் அரசியல், அங்கங்கு இரட்டை அர்த்த வசனங்கள் என இளைஞர்கள் விரும்பும் கதைக்களத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். கதைக்கு ஏற்ப திரைக்கதையில் கொஞ்சம் ஸ்வாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். வசனங்கள் இயல்பானவையாக ரசிக்கும்படி இருக்கிறது.

இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் எல்லாம் தியேட்டருக்கு வரவேண்டாம், அப்படியே அப்பா, அம்மாவுடன் வந்தாலும் காதுகளை பொத்திக்கொள்ளுங்கள் (இல்லையென்றால் சந்தேகம் கேட்டு துளைத்தெடுத்து சங்கடத்தில் நெளிய வைப்பார்கள்) என்று சொல்லும் விதமாக டபுள் மீனிங்… இல்லையில்லை சிங்கிள் மீனிங் வசனங்களை கேப் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நுழைத்துள்ளார்கள்.

தாராளமாக ரசித்துவிட்டுத்தான் போங்களேன்.. என்ன கெட்டுப்போகிறது..?