இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்

உண்மை காதலில் சந்தேகம் இருக்க கூடாது என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது.

பெண்கள் காதல் என்றாலே வெறுத்து ஒதுக்கும் ஹரிஷ் கல்யாணுக்கு பணக்காரப்பெண் ஷில்பா மஞ்சுநாத் மீது சில முட்டல் மோதல் நிகழ்வுகளுக்குப் பின் காதல் துளிர்க்கிறது.. ஆனாலும் முரட்டு குணம் கொண்ட ஹரிஷ் கல்யாண் தனது பொஸஸிவ்னெஸ் காரணமாக காதலில் அடிக்கடி சிக்கலை வரவழைக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஷில்பா ஹரிஷை விட்டு விலக முயற்சிக்கிறார். இந்த சமயத்தில் அவருக்கு முறைப்பையனுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார் அவரது தந்தை சுரேஷ். ஷில்பாவால் ஹரிஷை மறக்க முடிந்ததா, ஹரிஷால் தன்மீது உள்ள தவறுகளை திருத்திக்கொண்டு காதலை மீட்டெடுக்க முடிந்ததா என்பது மீதிக்கதை.

பெண்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கி, பின்னர் அவர்கள் மீது காதல் வயப்படும் மனநிலை கொண்ட இளைஞன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண். கூடுதலாக ஆக்சன் அவதாரமும் அவருக்கு நன்றாகவே செட் ஆகி இருக்கிறது. ஆனால் அவரது செயல்பாடுகள் மீது நமக்கு எரிச்சல் தோன்றுவது தான் அவரது நடிப்பிற்கு கிடைத்த வெற்றி.

நாயகி ஷில்பா மஞ்சுநாத் படம் முழுவதும் ஒரு காதலி எந்த அளவுக்கு தனது காதலனிடம் விட்டுக்கொடுத்து இறங்கிப் போவாள் என்பதையும் அதேசமயம் காதலில் சந்தேகம் வருவதற்கு தன்னை அறியாமலேயே தனது செயல்பாடுகள் மூலம் காரணமாக இருப்பபாள் என்பதையும் இரண்டு விதமாக அழகாக பிரதிபலித்திருக்கிறார்.. குறிப்பாக அவரது மேல் உதட்டில் மச்சம் கூட நம்மை வசீகரிக்கிறது.

நாயகியின் தோழியாக வரும் திவ்யாவும் தனது துறுதுறு நடிப்பால் நம்மை கவர்கிறார். இனி அவரைத் தேடியும் கதாநாயகி வாய்ப்புகள் கதவைத் தட்டலாம். பாலசரவணன் மாகாபா ஆனந்த் என இரண்டு பேர் இருந்தாலும் காமெடி பற்றாக்குறை படம் நெடுக நன்றாகவே தெரிகிறது. பக்குவப்பட்ட தந்தையாக பொன்வண்ணன் வந்தாலும் அவரது பிளாஷ்பேக் காட்சிகளில் காட்டப்பட்ட அவரது முரட்டு தனத்தில் இருந்து எப்படி இப்படி மாறினார் என்பதை கொஞ்சம் விரிவாக காட்டியிருக்கலாம். சாம் சிஎஸ்சின் பின்னணி இசையும் பாடல்களும் கவின் ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம்.

காதல் காட்சிகளை கவிதை ரசமும் காமரசமும் சொட்டச் சொட்ட படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. குறிப்பாக பொசசிவ்னஸ் என்கிற பெயரில் சந்தேக புத்தி கொண்ட ஆண்களை காதலிக்கும் பெண்களுக்கு இந்தப் படம் ஒரு விழிப்புணர்ச்சியை தரும் என்று கூட சொல்லலாம். முட்டாள்தனமான செயல்பாடுகளால் தங்களது காதலை இழக்கும் இளைஞர்களுக்கும் இந்த படம் ஒரு பாடம் என்றும் சொல்லலாம்.