கே.ஜி.எஃப் (சாப்டர் 1) – விமர்சனம்


பொதுவாக மலையாளம், தெலுங்கு படங்களைப்போல கன்னட படங்கள் தமிழ்நாட்டில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுவது இல்லை.. அவர்கள் நடிப்பு, கதை என எல்லாமே வேறு விதமாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம் ஆனால் சமீபகாலமாக கன்னடத்தில் உருவாகும் சில சூப்பர்ஹிட் படங்களின் கதைகளை இங்கே தமிழில் ரீமேக் செய்யும் கலாச்சாரம் ஆரம்பித்துள்ளது

அதன் அடுத்த கட்டமாக தற்போது கன்னட,ம் தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளுக்கும் செட்டாகும் விதமாக ஒரு கன்னட படம் நேரடியாக தமிழில் வெளியாகி உள்ளது அதுதான் கன்னட சினிமாவின் இளம் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப்

சிறுவயதில் இருந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வெறியோடு அனாதையாக வளர்ந்தவர் ஹீரோ யஷ். மும்பையில் மிகப்பெரிய டானாக மாறும் யஷ்ஷிடம், கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தின் முதலாளியை கொல்லும் வேலை ஒப்படைக்கப்படுகிறது இதற்காக பெங்களூர் வரும் யஷ் தனது திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு யாருமே நுழையமுடியாத, நுழைந்தால் உயிருடன் திரும்பமுடியாத எஃகு கோட்டையான கோலார் தங்க வயலுக்குள் நுழைகிறார்.

தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு வெளியே வந்தாரா..? இல்லை கோலார் தங்க வயல் அவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதா..? இதுதான் மீதிப்படம்

இதை படமாக்கிய விதத்தில் தான் பிரமிக்க வைத்து இருக்கிறார்கள். நாயகன் யஷ் முரட்டுத்தனமான தோற்றத்துடன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகர் ராம்சரண் போல தோற்றமளிக்கிறார்.. சண்டைக்காட்சிகளில் இன்னொரு ராஜ்கிரண் என்றே இவரை வர்ணிக்கலாம். இவரது கதாபாத்திரமே அழுத்தமான, எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இவர் நடிப்பில் நாம் பெரிதாக குறை கண்டுபிடிக்க முடியவில்லை

படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் கதையை நகர்த்தி செல்லும் விதமாக நேர்த்தியாக தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். கோலார் தங்க வயலுக்குள் நுழைந்ததும் கதை வேகமெடுக்கிறது அடுத்தடுத்து வரும் காட்சிகள் நம்மை அச்சத்துடனேயே படம் பார்க்க வைக்கின்றன எதிரியை கொல்வதற்கு படிப்படியாக யஷ் திட்டம் தீட்டும் காட்சிகள் செம..

கோலார் தங்க சுரங்கத்தில் ஒட்டுமொத்த பிரமாண்ட கூட்டத்தையும் தனது கேமராவில் கேமராவுக்குள் கட்டுக்கோப்பாக அடக்கி கலைநயத்துடன் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா. ரவி பன்சர் மற்றும் தன்ஷிக் பக்ஷி ஆகியோரின் இசை படத்திற்கு பக்கபலம்

நம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படத்தை பார்க்கும்போது குருவி படத்தின் சாயல் தோன்றுவதும், படத்தின் கதாபாத்திரங்கள் பல நமக்கு அன்னியப்பட்டு இருப்பதும் மட்டுமே மைனஸ் பாயிண்ட்டாக இருக்கும் மற்றபடி அடிமை போராட்டத்தில் ஈடுபட்டு அடிமைத்தளையை உடைக்கும் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு பிடித்தமானவைதான் அந்த வகையில் இந்த கே.ஜி.எஃப் படமும் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயம் இல்லை.

அந்தவகையில் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.