கொலைகாரன் – விமர்சனம்


ஒரு அபார்ட்மென்டில் எதிர் வீட்டில் வசிக்கிறார்கள் விஜய் ஆண்டனியும், சீதாவும் அவரது மகள் ஆஷிமாவும். இந்த நிலையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நபரின் வழக்கை துப்புத் துலக்கும் போலீஸ் அதிகாரி அர்ஜுனுக்கு சீதா மற்றும் ஆஷிமா மீது சந்தேகம் வருகிறது. அது குறித்து விசாரணை நடத்த பக்கத்து வீட்டுக்காரர் விஜய் ஆண்டனி ஒத்துழைப்பு கொடுக்காததால் அவர் மீதும் அர்ஜுனனின் சந்தேகம் திரும்புகிறது.

தனது மேலதிகாரி நாசருடன் சேர்ந்து இந்த வழக்கு பற்றி விசாரிக்கும்போது இந்த இரண்டு தரப்பினருமே இந்த கொலையை செய்திருப்பதற்கான காரணம் வலுவாக இருப்பதாக தெரிய வருகிறது. அனாலும் ஆளுக்கொரு நபரை சுட்டிக்காட்டுகின்றனர். அதே சமயம் விஜய் ஆண்டனி பற்றிய ஒரு புதிய உண்மையும் அர்ஜூனுக்கு தெரியவருகிறது.

இறுதியில் இந்த கொலையை செய்தது யார், எதற்காக என்கிற உண்மையை அர்ஜுனன் கண்டுபிடிக்க முடிந்ததா, அப்படியானால் அந்த கொலைகாரன் யார் கொலை செய்தது ஏன் என்கிற பல கேள்விகளுக்கு இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் விடை செல்கிறது.

அர்ஜுன், விஜய் ஆண்டனி இருவரும் இணைந்திருப்பதால் மிகப்பெரிய அதிரடி சண்டை படமாக இருக்குமோ என நினைத்து தியேட்டருக்குள் நுழையும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதேசமயம் புதிய பாணியிலான திரைக்கதை அந்த ஏமாற்றத்தை போக்கி கதையுடன் ரசிகர்களை ஒன்ற வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியும் அதைவிட அர்ஜுனும் தங்கள் ஆக்சன் அவதாரத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு தங்களது புத்திசாலித்தனத்திற்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனி வழக்கம்போல அதே தீவிரமான சீரியஸான முகபாவத்துடன் வந்தாலும் தனது கேரக்டருக்கான நியாயத்தை சரியாக செய்துள்ளார்.

ஆக்சன் அடிதடி என பழக்கப்பட்டுப்போன அர்ஜுனுக்கு அதை ஒதுக்கி வைத்துவிட்டு துப்பறியும் போலீசார் அந்த கதாபாத்திரம் நிச்சயம் புதிதான ஒன்றாகத்தான் இருக்கும். ரசிகர்களுக்கும் கூட அப்படியே. சொல்லப்போனால் விஜய் ஆண்டனியை விட அர்ஜுனுக்கு நன்றாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

பார்ப்பதற்கு நடிகை ரவீனா டாண்டன் சாயலில் இருக்கும் கதாநாயகி ஆஷிமா நர்வால் வடக்கத்தி முகம் என்றாலும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார். சீதா, நாசர், போலீஸ் அதிகாரி பக்ஸ், வில்லன் சம்பத் ராம் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் படத்தை சீராக நகர்த்த உதவியிருக்கின்றனர்.

சைமன் கே.கிங்கின் பின்னணி இசை படம் முழுக்க ஒரு திரில்லர் மூடை தக்கவைத்துக் கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் முகேஷும் தன் பங்கிற்கு காட்சிகளின் புதிய கோணங்களில் மூலம் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இரண்டு ஹீரோக்களை வைத்துக்கொண்டு ஆக்சனை நம்பாமல் திரைக்கதையில் புத்திசாலித்தனத்தை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு உள்ளதை பாராட்டலாம். படத்தின் இறுதிவரை யார் கொலையாளி என்பதற்கான காரண காரியங்களை இரண்டு பக்கமுமே நம்பும் விதமாக சொல்லி கடைசியில் இதற்கு ஒரு விடையையும் சொல்லியிருப்பது அழகு. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் செல்லாமல் ஜாலியாக பொழுது போக்கலாம் என்று செல்பவர்களுக்கு இந்த படம் நிச்சயம் மனநிறைவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.