மாரி-2 ; விமர்சனம்


மாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2 இதிலும் அதே மாரி, அதே ரோபோ சங்கர்&வினோத் அல்லக்கைகள் என அலப்பறை கூட்டணி.. கதாநாயகியாக தனுஷை விரட்டி விரட்டி காதலிக்கும் சாய்பல்லவி.. எதிர்பாராத கோணத்திலிருந்து துளிர்க்கும் வில்லன் டொவினோ தாமஸ், தனுஷை பழிவாங்குவதற்காக தனுஷின் நண்பன் கிருஷ்ணாவை அவருக்கு எதிராக திருப்புகிறார்.

ஒரு கட்டத்தில் போதுமடா இந்த அடிதடி பொழப்பு என காதலி மற்றும் நண்பர்களுடன் ஊரைவிட்டே காலி செய்து கிளம்புகிறார் தனுஷ். ஆனால் அவரை எப்படியேனும் பழிவாங்கத் துடிக்கும் வில்லன் டொவினோ தாமஸ் மீண்டும் தனுஷை தன்னை தேடி வரவழைக்கிறார் மாரி மீண்டும் தனது ஆட்டத்தை ஆடினாரா இல்லை அலட்சியப்படுத்தினாரா என்பது மீதிக்கதை

கடந்த படத்தைப்போலவே இதிலும் இடைவேளை வரை மாரியாக கெத்து காட்டுவதும் பின் அமைதி ‘மாணிக்கமாக’ அடக்கி வாசிப்பதுமாக இரண்டு முகம் காட்டி உள்ளார் தனுஷ் படத்தை உற்சாகமாக நகர்த்துவதற்கு இந்த கேரக்டர் மாறுபாடு ரொம்பவே உதவிகரமாக இருக்கிறது அதேசமயம் மிகப்பெரிய ஹிட் படத்தையும் ஞாபகப்படுத்தாமல் இல்லை

துறுதுறு கதாநாயகியாக பெயருக்கு ஏற்றாற்போல் அராத்து ஆனந்தியாக ஆட்டோ டிரைவராக அதகளம் பண்ணியிருக்கிறார் சாய்பல்லவி கதாநாயகனுக்கு ஜோடியாக நடித்தால் தான் கதாநாயகி என்கிற இலக்கணத்தை உடைத்தெறிந்து கம்பீரமான கலெக்டராக நடிப்பில் மிடுக்கு காட்டுகிறார் வரலட்சுமி சொல்லப்போனால் வரலட்சுமி ஏற்று நடித்து வரும் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கான ஒரு புது ரூட்டை திறந்துவிட்டுள்ளது என்று சொல்லலாம்

வில்லனாக மலையாள நடிகர் டொவினோ தாமஸ். சடைமுடியுடன் சைக்கோ வில்லன் போல் அதிரடி முகம் காட்டுவதும் அரசியல்வாதியாக அண்டர்ப்ளே பண்ணுவதும் என ஒரு பர்பெக்ட் வில்லனாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் கிருஷ்ணாவுக்கு இதில் நேர்த்தியான கதாபாத்திரம்.. சிறப்பாக செய்திருக்கிறார். ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல இதிலும் ரோபோ சங்கர் -வினோத் காமெடி களைகட்டுகிறது

யுவனின் இசையில் ரவுடி பேபி பாடல் நம்மை துள்ளாட்டம் போட வைக்கிறது ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு நம்மை புதுப்புது ஏரியாக்களுக்கு அழைத்துச் செல்கிறது முதல் பாகத்தில் ஒரு சில விஷயங்களில் கோட்டைவிட்ட இயக்குனர் பாலாஜி மோகன், இந்த படத்தில் கொஞ்சம் சுதாரிப்பாக திரைக்கதையில் மெனக்கெடல் செய்திருக்கிறார்

அதேசமயம் சில இடங்களில் மாரி கதாபாத்திரம் ரஜினியின் ஹிட் படத்தை பிரதிபலிப்பதாக இருப்பதை கொஞ்சம் மாற்றி யோசித்து இருக்கலாமே என நினைக்க வைக்கிறார். கடந்த படத்தில் செஞ்சிருவேன் என மிரட்டிய தனுஷ் இந்த படத்தில் உறிச்சுடுவேன் என ஒரு புதிய பஞ்ச் டயலாக்கை குழந்தைகளுக்காக தயார் செய்து கொடுத்துள்ளார் அந்த வகையில் இளைஞர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் மீண்டும் எளிதாக கவர்கிறார் இந்த மாரி.