அடங்க மறு – விமர்சனம்


துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி.. எந்த வழக்கிலும் ஏதோ ஒரு விதத்தில் உண்மையை கண்டுபிடித்து விடலாம் என முனைப்பு காட்டும் போது சீனியர்கள் அவரது கையை உத்தரவு என்கிற ஒஎயரில் கட்டிப்போட்டு விடுகின்றனர் அதையும் மீறி ஒரு கட்டத்தில் நான்கு கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைகளின் அக்கிரமங்களை தோலுரிக்க முயற்சி செய்கிறார் ஜெயம் ரவி

அதன்பலனாக தனது மொத்த குடும்பத்தையும் காவு கொடுக்க வேண்டி வருகிறது ஜெயம்ரவிக்கு. போலீஸ் பணியைத் துறந்துவிட்டு தனது குடும்பத்தை நிர்மூலமாக்கிய அவர்களுக்கு நேரடியாக சவால் விட்டு பழிக்குப் பழி தீர்க்க கிளம்புகிறார் ஜெயம் ரவி. அது சாத்தியமானதா என்பதுதான் சுவாரசியமான மீதிக்கதை.

மீண்டும் ஒரு முறை அநீதிக்கு எதிராக தனி ஒருவனாக போராடும் கேரக்டர் ஜெயம்ரவிக்கு.. அநியாயத்தை தட்டிக்கேட்க முடியாமல் உயர் அதிகாரியின் உத்தரவு என்கிற பேரால் கட்டுப்படுத்தப்படும் போதெல்லாம் கோபத்தை அடக்கிக்கொண்டே கொந்தளிக்கும் ஜெயம் ரவி ஒவ்வொரு சாமானிய மனிதனின் கோபத்தையும் அழகாக பிரதிபலிக்கிறார்.

டெக்னாலஜி உதவியுடன் எதிரிகளை அவர் வேட்டையாடும் விதம் ரொம்பவே சுவாரசியம் இப்படியெல்லாம் நடக்குமா என லாஜிக்குகளை ஆராய்வதை விட்டுவிட்டு இப்படி நடந்தால்தான் நன்றாக இருக்கும் என நம்மை யோசிக்க வைத்து விடுகிறது திரைக்கதை

ஜெயம்ரவிக்கு ஆறுதல் சொல்லும் காதலி கதாபாத்திரத்தில் ராஷி கண்னா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் அநியாயத்திற்கு போலீஸ் அதிகாரியாக துணைபோகும் வழக்கமான ஒரு போலீஸ் அதிகாரியாக, அதேசமயம் காரம் குறையாமல் வந்து செல்கிறார் நடிகர் சம்பத் அவருக்கு துணையாக, கூடவே அதிகாரங்களுடன் அதிகார திமிருடன் மைம் கோபியும் ஒரு சராசரி ரசிகனின் கோபத்தை வாங்கிக்கட்டுவதன் மூலம் நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார்கள்

கோடீஸ்வரர்களாக நடித்திருக்கும் அந்த நால்வரையும் நேரில் பார்த்தால் எழுந்து ஒரு அறை விடலாம் போல தோன்றுமளவிற்கு நடிப்பில் எதார்த்தம் காட்டியுள்ளார்கள் பக்குவப்பட்ட போலீஸ் அதிகாரியாக அழகம் பெருமாள் மற்றும் முனிஸ்காந்த் இருவரும் ஜெயம்ரவிக்கு மட்டுமல்ல நமக்கும் ஆறுதல் தருகிறார்கள். கொஞ்ச நேரமே வந்தாலும் லாயராக பூர்ணாவின் என்ட்ரி அசத்தல்

டெக்னாலஜி மூலமான பழிவாங்கலுக்கு சாம் சிஎஸ்சின் பின்னணி இசையும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும் விறுவிறுப்பு கூட்டி இருக்கின்றன போலீஸ் பணிக்கு புதிதாக சேரும் நேர்மையான துடிப்பான இளைஞர்களை அதிகாரம் என்கிற பெயரில் கட்டுப்படுத்தும் அதிகார வர்க்கத்தின் மீதான தனது கோபத்தை, மொத்த திரைக்கதையிலும் காட்டியுள்ளார் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இடைவேளைக்கு பிறகு டெக்னிக்கலாக எதிரிகளை பழி வாங்கும் உத்திகள் புதுசு என்றாலும் சாமானிய ரசிகன் கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே புரியும் அளவிற்கு இருப்பது சற்று பலவீனம்

அதேபோல இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் ஹீரோ கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பது ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தவே செய்கிறது அதற்கேற்றார்போல் இடைவேளைக்கு பின்னும் இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு தனது வேலையை நாயகன் ஜெயம் ரவி கச்சிதமாக முடித்தாலும் ஆக்சன் காட்சிகளில் அது பஞ்சத்தை ஏற்படுத்தி கொஞ்சம் ஏமாற்றத்தையும் தருகிறது

இருந்தாலும் அதை திரைக்கதையில் ஈடுசெய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் மொத்தத்தில் ஆறு மாதம் விடுமுறையில் போய்விட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிய ‘தனி ஒருவனை’ பார்த்த உணர்வுதான் இந்த படத்தில் ஏற்படுகிறது இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட்டும் அதுவே மைனஸ் பாயிண்ட்டும் அதுவே.