சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்


பேய்க்கதையை படமாக எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலே பேய்க்கான பிளாஸ்பேக்கை உருவாக்குவது தான்.. இயக்குனர் அட்லீ தயாரிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் மூலம் அறிமுக இயக்குனரான ஐக் இதை எப்படி கையாண்டு இருக்கிறார் பார்க்கலாம்.

நீண்ட நாட்களாக விலைபோகாமல் இருந்த பங்களா ஒன்றை பேய் இருப்பதாக கதைகட்டி விட்டு, குறைந்த விலைக்கு வாங்குகிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜீவா. அதை தனக்கே சொந்தமாக்கி கொள்ள நினைக்கும் ஜீவாவுக்கு போட்டியாக, தம்பிராமையாவும் அது தன் வீடு என உரிமை கொண்டாடி உள்ளே நுழைகிறார்.

ஜீவாவின் குடும்பத்துக்கும் தம்பிராமையாவின் குடும்பத்துக்கும் யாருக்கு வீடு சொந்தம் என குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. அங்கே இருக்கும் பேயோ ஒற்றுமையான குடும்பமாக இல்லாதவர்களை அந்த வீட்டிலேயே இருக்க விடாத வித்தியாசமான குணம் கொண்ட பேய்.

சண்டைபோட்டுக்கொண்டு இருந்த இரு குடும்பமும் இதை உணர்ந்து சமாதானம் ஆனார்களா..? இல்லை அங்கிருக்கும் பேய் அவர்களையும் துரத்தி அடித்ததா..? யார் அந்த பேய்..? அதன் பின்னணி என்ன என்பதை கலகலப்பாக, அதேசமயம் கொஞ்சம் திரில்லிங்காகவும் சொல்லியிருக்கிறார்கள்..

நாயகன் ஜீவாவுக்கு ஏற்ற சரியான கேரக்டர் தான்.. ஸ்ரீதிவ்யாவுடன் காதல், யதார்த்தமாக ஏதாவது செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்வது என குறையில்லாமல் நடிப்பை வழங்கி இருக்கிறார். நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய வேலை இல்லை என்றாலும் நிறைவாகவே வந்து போகிறார்..

கலகலப்புக்கு சூரி. ஜீவாவுடன் சேர்ந்து பேய்க்கதை கட்டவும், பின்னர் பேயை துரத்தவும் அவர் படும் பாடு சிரிப்பை வரவழைக்கின்றன.. அவருக்கு ஒரு ஜோடியையும் கொடுத்து ரொமான்ஸ் மூடில் வேறு இறக்கி விட்டுள்ளார்கள். பாசமான அம்மா ராதிகா பாஸ் மார்க் வாங்குகிறார். தம்பிராமையாவுக்கு படம் முழுவதும் வரும் ஆனால் சற்றே நெகடிவான கேரக்டர்.. அதிலும் தேவதர்ஷினியுடனான அந்த வாஷிங்மெஷின் காமெடிக்கு தியேட்டர் அதிர்கிறது..

ஒருபக்கம் பேய்க்கதை பரப்பும் மயில்சாமி, இன்னொரு பக்கம் பேயை விரட்டுவதாக கோவை சரளா இருவரும் போட்டு தாக்குகிறார்கள்.. நான் கடவுள் ராஜேந்திரனுக்கு இரண்டு நிமிட வேலைதான் நட்புக்காக ஆரம்ப காட்சிகளில் ஜெய் வந்துபோவது இனிய சஸ்பென்ஸ். படத்தின் மைய கதாபாத்திரமாக வரும் ராதாரவிக்கு இதில் பேயாக புரமோஷன் கொடுத்துள்ளார்கள்..

அவர் சம்பந்தமான பிளாஸ்பேக் மனதை உருகவைக்கிறது. அவரது மகளாக கொஞ்ச நேரமே வரும் கௌசல்யா அதிரவைக்கிறார். இதுநாள் வரை பல காரணங்களுக்காக பேய் மற்றவர்களை துரத்தி அடிப்பதை பார்த்திருக்கிறோம்.. ஆனால் குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்காக ஒரு பேய் களமிறங்கி இருப்பது புதுசு..

ரசிகர்களை சில இடங்களை பின்னணி இசையால் பயமுறுத்துகிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவு பங்களாவின் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வருகிறது. கலகலப்பாக அதே சமயம் கொஞ்சம் டெரர் கலந்து ஒரு பேய்க்கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஐக்.. பேய்க்கான பிளாஸ்பேக்கை பின்னியதில் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.. தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா சம்பந்தப்பட்ட இரண்டு காட்சிகளில் பேய் ஆட்டம் காட்டும்போது திகிலில் உறைய வைக்கிறார்.

பேய் சம்பந்தமான பல காட்சிகளில் இவரும் வழக்கமான க்ளிஷேக்களில் இருந்து தப்பமுடியாமல் இயக்குனர் ஐக் தவித்திருப்பது தெரிகிறது..இருந்தாலும் பேய்க்கதையை பின்னணியாக வைத்து குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி படம் இயக்கியதற்காக இயக்குனர் ஐக்கை தாரளமாக பாராட்டலாம்.

தோல்வியால் துவண்டு கிடக்கும் ஜீவாவுக்கு சற்றே தெம்பையும் தைரியத்தையும் இந்தப்படம் தந்துள்ளது உண்மை

.