திமிரு புடிச்சவன் – விமர்சனம்


தென் மாவட்டம் ஒன்றில் கான்ஸ்டபிளாக இருக்கும் விஜய் ஆண்டனி, தன் தம்பியை கஷ்டப்பட்டு படிக்க வைக்க, அவனோ பள்ளிப்பருவத்திலேயே துஷ்டனாக வளர்கிறான். ஒருகட்டத்தில் அண்ணனின் டார்ச்சர் தாங்காமல் சென்னைக்கு ஓடுகிறான் தம்பி.. சில வருடங்களுக்குப்பின் சென்னைக்கு சப் இன்ஸ்பெக்டராக வரும் விஜய் ஆண்டனி, தனது தம்பி ஒரு ரவுடியாக மாறியிருப்பது கண்டு அதிர்ச்சியானாலும் அவனை என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார். புரமோஷனும் வாங்குகிறார்.

ஆனால் தமிழ்நாடு முழுக்க அவரது தம்பியை போன்ற பல மைனர் சிறுவர்களை எல்லாம் ரவுடிகளாக மாற்றி, கூலிப்படை தலைவனாக இருக்கிறார் மெயின் ரவுடி தீனா. அவரை அழித்தால் தான், புதிதாக இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க முடியும் என்பதை உணரும் விஜய் ஆண்டனி, அவரை பொட்டென என்கவுண்டரில் போட்டுத்தள்ளாமல் அவரது இமேஜை சிதைத்து போலீஸ் தான் கெத்து என காட்டி இளம் ரவுடிகள் மனதை மாற்ற முயற்சிக்கிறார்.. ஆனால் அவர் நினைத்தபடி நடந்ததா என்பது மீதிக்கதை.

அநியாயத்துக்கு நியாயம் பேசும் நல்ல போலீஸாக விஜய் ஆண்டனி.. போலீஸ் கெட்டப் அவருக்கு பொருந்தினாலும் அவரது கேரக்டரை இன்னும் கெத்தாக வடிவமைத்திருக்கலாமே என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆக்சனில் வழக்கம்போல விஜய் ஆண்டனி அதிரடி காட்டினாலும் சண்டைக்காட்சிகள் குறைவு என்பதும் நம்மை அப்படி நினைக்க வைக்கிறது.
லஞ்ச போலீஸாக ஒரு கதாநயகி என்பதே புதுசு. அந்த கேரக்டரில் நிவேதா பெத்துராஜ் செமையாக ஸ்கோர் பண்ணினாலும் அவருக்கான டப்பிங் சரியாக செட்டாகவில்லை. கவனித்திருக்கலாம். மெயின் ரவுடியாக புரமோஷன் ஆகியிருக்கும் தீனாவுக்கு வாழ்த்துக்கள். அவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான ஆடுபுலி ஆட்டத்தின் சுவாரஸ்ய குறைவால், பல இடங்களில் தீனாவுக்கான தீனி மிகவும் குறைவே.
இதுவரை சின்னச்சின்ன ரோல்களில் நடித்து வந்த சம்பத்ராமுக்கு ரொம்ப நாட்கள் கழித்து திருப்தியான பெயர்சொல்லும்படியான வேடம்.. அவரைப்போலவே நமக்கும் மகிழ்ச்சி. திருநங்கையின் பெருமையை பறைசாற்றும் விதமாக அந்த போலீஸ் கேரக்டருக்கு சரியான மரியாதை செய்திருக்கிறார் அதில் நடித்தவர்.,

இளம் ரவுடிகளாக வரும் அந்த நான்கு சிறுவர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் பத்திரிகையாளர் செந்தில் ஏரியா கவுன்சிலரை போட்டு புரட்டி எடுக்கும் காட்சியில் ஒவ்வொரு சாமான்யனின் கோழைத்தனத்தையும் தீவைத்து கொளுத்துகிறார். தீனாவின் தந்தையாக வருபவரும் கவனிக்க வைக்கிறார். பாடல்களே இல்லாமல் படம் நகர்வது படத்திற்கு பிளஸ்.. க்ளைமாக்சிற்கு சற்றுமுன் வரும் ‘வேலவா’ என்கிற பாடல் சண்டைக்காட்சி விஜய் ஆண்டனி பிராண்ட் ஆக படம் பார்ப்பவர்களை உசுப்பேற்றுகிறது..

போலீஸ் படங்களுக்கான வழக்கமான கிளிஷேக்கள் எதுவும் இல்லாமல் படத்தை ஒரு புதிய ரூட்டில் கொண்டுசெல்ல முயற்சித்திருகிறார் இயக்குனர் கணேசா. படத்தின் சில காட்சிகள் அந்த முயற்சியை பாராட்டவும் வைக்கின்றன. அதேசமயம் போலீஸ் படம் பார்க்கவரும் ரசிகர்களின் ஆவேச மனநிலையையும் கருத்தில் கொண்டு காட்சிகளை இன்னும் அதிரடியாக வடிவமைத்திருக்கலாம். கோவில் திருவிழாவிலேயே முடியவேண்டிய க்ளைமாக்ஸை அதற்கு மேலும் இழுத்திருக்கத்தான் வேண்டுமா என்ன..? அதேபோல அந்த மூன்று இளம் ரவுடிகளுக்கும் விஜய் ஆண்டனிக்குமான வாத்தியார்-மாணவன் பாடமும் கொஞ்சம் அதிகப்படி தான்.
இப்படி சில விஷயங்கள் படத்தின் வேகத்தை குறைத்தாலும், இளம் சிறார்களை எப்படி குற்றவாளிகளாக மாற்றுகிறார்கள், அதை எப்படி தடுக்கலாம் என புது ரூட்டில் யோசித்ததற்காக இயக்குனர் கணேசாவை பாராட்டலாம்.