வனமகன் – விமர்சனம்


காட்டிலேயே வளர்ந்த காட்டுவாசி ஒருவன் நாட்டுக்குள் வந்தால்..? இதுதான் வனமகன் படத்தின் ஒன்லைன்.

பெற்றோர் இல்லாமல் வளர்ந்த கோடீஸ்வரி சயிஷாவுக்கு அவரது அப்பாவின் நண்பர் பிரகாஷ்ராஜ் தான் எல்லாம்.. பிரகாஷ்ராஜின் மகன் வருண் உள்ளிட்ட நண்பர்களுடன் அந்தமான் தீவுக்கு பிக்னிக் போன இடத்தில் அவர்களது காரில் காட்டுவாசியான ஜெயம் ரவி விழுந்து அடிபடுகிறார்.. வேறுவழியின்றி அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.. ஜெயம் ரவியின் கலாட்டா தாங்கமுடியாத மருத்துவமனை அவரை சாயிஷாவின் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறது..

வீட்டிலும் ஒருசில கலாட்டக்களுக்கு பின் ஜெயம் ரவியை தான் சொன்னபடி கேட்கும் விதமாக மாற்றுகிறார் சாயிஷா.. அவரை தனது அலுவலகத்துக்கும் அழைத்து செல்கிறார். இது சாயிஷாவை ஒருதலையாக காதலிக்கும் வருணுக்கு எரிச்சலூட்டுகிறது.. ஒருகட்டத்தில் வருணின் காதலை சாயிஷா மறுக்க, அதில் ஏற்பட்ட தகராறில் வருணை அடித்து உதைத்து கோமா நிலைக்கு ஆளாக்குகிறார் ஜெயம் ரவி.

இந்தநிலையில் ஜெயம் ரவியை தேடி சென்னை வரும் அந்தமான் போலீஸார் அவரை கைது செய்து அந்தமானுக்கு கொண்டு செல்கிறார்கள்.. அவரை காப்பாற்றுவதற்காக சாயிஷாவும் தனது உதவியாளர் தம்பிராமையாவுடன் அந்தமான் செல்கிறார்.. அவரை தேடி பிரகாஷ்ராஜும் செல்கிறார்.. அங்கே சென்றபின் தான், ஜெயம் ரவியை கொல்வதற்கு அந்தமான் போலீஸார் திட்டமிட்டிருப்பதும் அவரையும் அவரது இனத்தையும் போலீஸார் வேட்டையாடுவதற்கு ஒருவிதத்தில் தன்னையறியாமலேயே தான் செய்த ஒரு செயல் தான் காரணம் என்பதும் சாயிஷாவுக்கு தெரியவருகிறது.. அது என்ன காரணம்..? சாயிஷாவால் ஜெயம் ரவியை காப்பாற்ற முடிந்ததா என்பது தான் மீதிக்கதை.

இன்றைக்கும் நாகரிகத்தின் சுவடுகள் படியாத நூற்றுக்கணக்கான ஆதிவாசிகள் காட்டுகளில் வசிக்கவே செய்கிறார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவன் நகரத்துக்குள் வந்தால் என்கிற அழகனா கற்பனையை அற்புதமாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் விஜய்..

அவரது கற்பனைக்கு தனது முழுமூச்சான உழைப்பால் உருவம் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.. கிட்டத்தட்ட ஊமை என்பதுபோல படம் முழுவதும் ஒரு சில வார்த்தைகளை தவிர வசனமே பேசாத ஜெயம் ரவியை பார்ப்பதே புதிதாக இருக்கிறது.. காட்டுவாசியின் உடல்மொழிக்கு அவர் தன்னை தயார்படுத்திக்கொண்ட விதமும் சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியுள்ள மெனக்கெடலும் அவரை உண்மையான வணமகனாகவே மாற்றிவிட்டன என்றே சொல்லலாம்.

கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் சாயிஷா சைகலுக்கு ஒரு வெல்கம் பொக்கே கொடுக்கலாம். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு. அத்துடன் நடனத்திலும் நடிப்பிலும் அசத்தவே செய்கிறார்.. காட்டுக்குள் ஓடுவது, சறுக்கி விழுவது என நிறைய சிரமங்களும் பட்டிருக்கிறார்.. சாயிஷாவுக்கு தமிழில் ஒரு நல்ல இடம் காத்திருக்கிறது.

ஒரு கோடீஸ்வரன் கேரக்டர் என்றால் பிரகாஷ்ராஜுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.. வழக்கம்போல தனது கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார். ‘மேடம் பாப்பா.. மேடம் பாப்பா என நொடிக்கு நூறு தடவை சாயிஷவை அழைத்து நம்மை சிரிக்கவைக்கும் தம்பிராமையாவுக்கு இந்தப்படம் இன்னொரு மைனா என்றே சொல்லலாம். பிரகாஷ்ராஜின் மகனாக வருண்.. கோடீஸ்வர குடும்பத்திற்கான மிடுக்கையும் திமிரையும் காட்டும்போது எரிச்சலையும் ஜெயம் ரவியிடம் சிக்கி சின்னாபின்னமாகும்போது பரிதாபத்தையும் அள்ளுகிறார்.

அந்தமான் தீவில் போலீஸ் அதிகாரியாக வரும் சண்முகராஜன் நல்லவராக வந்து நம்மை நெகிழ வைக்கிறார்.. ஜெயம் ரவியை கொன்றே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் இன்னொரு அதிரடி போலீஸாக சாம் பாலும் சரியான தேர்வென நிரூபிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் என்கிற சிறப்பு இந்தப்படத்திற்கு கிடைத்தாலும் பாடல்கள் நம் மனதை தொடாமலேயே போய்விடுகின்றன.. அதை பின்னணி இசையில் ஈடுகட்டியிருகிறார் ஹாரிஸ்.. படத்தின் மிகப்பெரிய பலமாக திருவின் ஒளிப்பதிவு நம் கண்கள் வழியாக ஊடுருவி இதயத்தில் நிறைகிறது.

காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளின் வாழ்க்கையை குலைப்பதே நகரமயமாக்குதலும் தொழிமயமாக்குதலும் தான் என்கிற உண்மையையும் அதற்கு அதிகாரவர்க்கம் எப்படி துணைபோகிறது என்பதையும் அழுத்தமாக பதிய வைக்க முயன்றுள்ளார் இயக்குனர் விஜய். ஒரு காட்டுவாசி நாட்டுக்குள் வந்தால் என்கிற கற்பனையை படமாக்கும்போது ஏற்படும் லாஜிக் சறுக்கல்கள் இதிலும் உண்டுதான்..

குறிப்பாக ஜெயம் ரவியை போலீசாரும் அதிரப்படையினரும் துப்பாக்கியில் சுட்டும் அவர்மேல் குண்டு படாமல் தப்பிக்கும் காட்சிகளில் இதுவரை மற்றவர்கள் செய்த தவறைத்தான் இயக்குனர் விஜய்யும் செய்திருக்கிறார். அதேபோல சிறுவர் மலரில் மட்டுமே படித்துவந்த புலியின் நன்றிக்கடன் காட்சிகள் பார்க்க நன்றாக இருந்தாலும் காதில் பூ சுற்றும் ரகம் தான்.. ஆனாலும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தலின் மூலம் அதையெல்லாம் பூசி மெழுகிவிடுகிறார் விஜய்.

மொத்தத்தில் வனமகன் அனைவர்க்கும் பிடித்த தங்கமகன் தான்..