ஜாம்பி – விமர்சனம்


மிருதன் படத்தை தொடர்ந்து ஜாம்பியை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறது இந்த ஜாம்பி திரைப்படம்.

கோபி, சுதாகர், அன்பு ஆகிய மூவரும் நண்பர்கள். அம்மா மற்றும் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டையால் வாழ்க்கைய வெறுக்கிறார் கோபி.

சுதாகரோ மாமியார் மற்றும் மனைவியின் தொல்லை தாங்காமல் அவதிப்படுகிறார்.

தனக்கு பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதால் அன்புவும் விரக்தியில் இருக்கிறார்.

இவ்வாறு நண்பர்கள் மூவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினை. மூவரும் சேர்ந்து மது குடிக்கிறார்கள்.

அப்போது மனைவி கொடுமையால் சிக்கி இருக்கும் டி.எம்.கார்த்திக் இவர்களோடு சேர்கிறார். நான்கு பேரும் ஒன்றாக இணைந்து எங்கேயாவது சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்புகிறார்கள். அப்போது வழிப்போக்கனாக பிஜிலி ரமேஷ் இவர்களுடன் ஒட்டிக் கொள்கிறார்.

ஐந்து பேரும் ஈசிஆரில் உள்ள ரிசார்ட்டில் இரவு தங்குகிறார்கள். அங்கு நாயகி யாஷிகா ஆனந்த் மாணவிகளுடன் சுற்றுலா வருகிறார்.

இந்த ரிசார்ட்டில் இரவு விருந்தில் இறந்து கிடந்த கோழிகளை கொண்டுவந்து ஓட்டல் உணவுகளில் கலந்து பரிமாறுகிறார்கள். இதை உண்பதனால் அனைவரும் ஜாம்பி ஆக மாறுகிறார்கள்.

இந்த உணவை சாப்பிடாமல் இருந்த கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ், கார்த்திக், அன்பு, யாஷிகா ஆகியோர் மட்டும் ஜாம்பியாக மாறாமல் இருக்கிறார்கள்.

இதே இடத்தில் ரவுடியாக இருக்கும் யோகிபாபுவும், இவரை என்கவுண்டர் செய்வதற்காக காத்திருக்கும் ஜான் விஜய்யும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், ஜாம்பியாக மாறியவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்திற்கு ஒளிப்பதிவு பலம் சேர்க்கிறது. பிரேம்ஜியின் இசையும் படத்திற்கு மேலும் ஒரு ப்ளஸ்.

இவ்வளவு காமெடி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் புவன் நல்லான். ஆனால் காமெடிக்கோ படத்தில் ஏகப்பட்ட பஞ்சத்தை ஏற்படுத்தி விட்டார்.