ரஜினி முருகன் – விமர்சனம்


மதுரை நகரின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ராஜ்கிரணின் பேரன் சிவகார்த்திகேயன். படித்துவிட்டு வெட்டியாக ஊரைச்சுற்றும் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். ஆனால் அவரது அப்பாவுக்கும், சிவகார்த்திகேயன் அப்பாவுக்கும் இருபது வருட தகராறு ஒன்று குறுக்கே நிற்கிறது. நண்பன் சூரியின் உதவியுடன் சொந்தமாக தொழில் ஆரம்பித்து கீர்த்தி சுரேஷின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறார் சிவா.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயனுக்கு இடைஞ்சல் கொடுக்கிறார் ரவுடியான சமுத்திரக்கனி.. அந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் தனது தாத்தாவின் ஆலோசனைப்படி தங்களது பூர்வீக வீட்டை விற்க முயற்சிக்கிறார் சிவகார்த்திகேயன்.. ஆனால் நானும் ஒரு வாரிசு என போலி ஆதாரங்களுடன் வந்து பூகம்பம் கிளப்புகிறார் சமுத்திரக்கனி.. இந்த இக்கட்டான சூழலை சிவகார்த்திகேயன் எப்படி சமாளித்து தனது காதலியை கரம்பிடிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

பல பிரச்சனைகளை கடந்து, நீண்ட நாட்கள் இழுபறிக்குப்பின் வாழ்வா, சாவா என்கிற சூழலில் நிற்கும் சிவகார்த்திகேயனுக்கு உற்சாக டானிக் கொடுக்கும் விதமாக ஆரம்பம் முதலே களைகட்டுகிறது படம்.. கீர்த்தி சுரேஷின் காதலை பெறுவதற்காக சூரியுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் அடிக்கும் கூத்துக்கள் எல்லாமே கலாட்டா ரகம் தான். சமுத்திரக்கனியுடன் உரசலுக்குப்பின் அவரை பஞ்சாயத்துக்கு இழுத்து வந்து லந்து பண்ணுவது செம அலப்பறை.

முகத்தை அழகாக சுழித்து பழிப்பு காட்டும் கீர்த்தி சுரேஷின் அழகு முகமே நம் மனதை அப்படியே அள்ளுகிறது. கமர்ஷியல் கதைக்கு தோதான ஹீரோயின். காமெடி கூட்டணியில் வருத்தப்படாத வாலிபராக சூரி இணைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிலும் அவர் பாரின் பெண்ணை கரெக்ட் பண்ணுவதும், தனது தந்தையின் மொய் வசூல் பணத்தை எண்ணுவதும் விலா நோகவைக்கும் காமெடி.

தாத்தாவாக ராஜ்கிரண் வழக்கமான பாந்தமான நடிப்பு. சமுத்திரக்கனி முழு நேர வில்லனாக அவதாரம் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதில் ஓரளவு பாசாகியும் உள்ளார். ஞானசம்பந்தன், கீர்த்தி சுரேஷின் அப்பாவாக வரும் அச்சுதகுமார் உட்பட, அனைவரும் மிகப்பொருத்தமான தேர்வு.. இந்த இருவருக்குமான பிளாஸ்பேக் கூட சுவாரஸ்யம் தான்.

இமானின் இசையில் ஏற்கனவே ஹிட்டான பாடல்களை பார்க்கும்போது இன்னும் ஜாலியாகத்தான் இருக்கிறது.. ஆனால் எதற்கு இரண்டு திருவிழா பாடல்கள் ஒன்றை கட் பண்ணியிருக்கலாமே.. படத்தின் செகண்ட் ஆப் மட்டும் கொஞ்சம் நீளமோ என்பது போல ஒரு பிரமை தட்டுகிறது.

பொன்ராமின் முந்தைய பட சாயல் இதிலும் கொஞ்சம் எட்டிப்பார்த்தாலும், சமுத்திரக்கனியின் வில்லத்தனம், செல்லம்பட்டி பஞ்சாயத்து என சில ஐட்டங்களை உள்ளே நுழைத்து கலகலப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் பொன்ராம். ரசிகர்களுக்கு ரஜினி முருகன் நிச்சயமாக பொங்கல் விருந்துதான் என்பதில் சந்தேகமேயில்லை.