அவள் பெயர் ரஜ்னி ; விமர்சனம்


மகிழ்ச்சியான தம்பதிகளான அபிஜித் (சைஜு குருப்) மற்றும் கௌரி (நமீதா பிரமோத்) ஆகியோர் நகரின் புறநகரில்; தங்கியிருக்கும் அபிஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரைச் சென்று பார்த்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்புவதில் படம் தொடங்குகிறது. வழியில் எரிபொருள் தீர்ந்து கார் நின்றுவிட கௌரியை காரில் விட்டுவிட்டு, அபிஜித் வாகனத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு புறப்பட்டு செல்கிறார். அதன் பிறகு காரை பூட்டி விட்டு உள்ளே கௌரி தூங்க சிறிது நேரம் கழித்து, காரின் மேலிருந்து சில சத்தங்களால் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்க்க அபிஜித் அவர்களின் காரின் கூரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்க்கிறாள்.

இதையடுத்து கௌரியின் சகோதரர் நவீன் (காளிதாஸ் ஜெயராம்), தனது மைத்துனரின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். நவீன் மற்றும் இன்ஸ்பெக்டர் பால் (அஷ்வின் குமார்) இருவரும் இணைந்து கொலையாளியை தேடும்; வேட்டையில் இறங்குகிறார்கள்.. அபிஜித் மரணம் ஏன், யார் அந்த ரஜினி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிகதை.

காளிதாஸ் ஜெயராம் நவீன் கதாபாத்திரத்தில் மாமா அபிஜித்தின் கொலைக்கான தேடுதல் வேட்டையுடன் தன் சகோதரி கௌரியை கொலையாளியிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகிகள் இருவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை அளவோடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கணவன் சைஜு குருப், தன் கண் முன்னே கொல்லப்படுவதைப் பார்த்து, நமிதா பிரமோத் அதிர்ச்சியிலும், பீதியிலும் அலறும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் பால் செல்வராஜாக அஷ்வின் குமார் கம்பீரம் மற்றும் மிடுக்குடன் வலம் வந்து கொலையாளியை கண்டுபிடித்து வேட்டையாடி திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். ஒட்டு மொத்த திரைக்கதைக்கு பலம் சேர்த்து மிரட்டலான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் திருநங்கையாக நடித்த பிரியங்கா சாய். ஆக்‌ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார்.

ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளியமைப்பும் காட்சியமைப்பும் படத்திற்கு ஒரு உன்னதமான நேர்த்தியையும் அமைப்பையும் தந்துள்ளது. அதேபோல 4 மியூசிக்’ இசை மற்றும் பின்னணி இசையில் த்ரில்லருக்கான பயத்தையும், மிரட்டலையும் சரியாக பதிவு செய்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.

தங்கள் சொந்த விருப்பங்கள் மூலம் வாழ்வதற்கான உரிமைகள் கொண்ட ஒரு சமூகத்தின் போராட்டங்கள் மற்றும் அவர்கள் சமூகம் மரியாதையாக நடத்த வேண்டியதை இந்த படத்தில், அதை திறமையாக கையாண்டு பரபரப்பான திரைக்கதை அமைத்து நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை த்ரில்லராக படைத்துள்ளார் இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ்,