சூரகன் ; விமர்சனம்


இளம் போலீஸ் அதிகாரி ஈகன் (கார்த்திகேயன்) எதிர்பாராத ஒரு சம்பவத்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு பெண் அடிபட்டு கிடப்பதை அறிந்து அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால் அந்தப்பெண் இறந்து விடுகிறார். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயலும் போது அந்தப்பெண்ணுடன் இருந்த மற்ற இரு பெண்களும் கொல்லப்படுகிறார்கள். யார் இந்த கொலைகளை செய்தார்கள்? அவர்களை ஈகன் கண்டுபிடித்தாரா? மீண்டும் பணியில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

புதுமுக நாயகன் கார்த்திகேயன் மிடுக்கான தோற்றத்துடன் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ்க்கு உண்டான ஆக்ரோஷமும் அதற்கான உடல் மொழியும் நன்றாகவே பொருந்தியிருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்லும் நடிகை சுபிக்ஷா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்.

வில்லன் வின்சென்ட் அசோகன் நடை, உடை, பாவனை என அனைத்தும் பயமுறுத்தும்படி அமைந்திருப்பது சிறப்பு. எப்பொழுதும் போல் இந்த படத்திலும் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். அதேபோல ஆரம்பத்தில் சில காட்சிகளே வந்தாலும் இறுதிக்கட்ட காட்சிகளில் அதிரடியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார் மன்சூர் அலிகான். பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், வினோதினி ஆகியோருக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவு.

ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அச்சு ராஜாமணி பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசையில் பிரித்தெடுக்கிறார். காட்சிகள் காண்பித்த விதம் கோர்வையாக இல்லாமல் இருப்பதை கூடுதல் கவனம் செலுத்தி சரி செய்திருக்கலாம் எடிட்டர் ராம் சுதர்ஷன்.

தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ஒரு கொலையை துப்பறிய செல்லும் இடத்தில் எதிர்படும் சிக்கல்களை சமாளித்து ஜெயிப்பதை அரசியல் நெடியுடன் அதிரடி ஆக்ஷன் கலந்து இயக்கியுள்ளார் இயக்குனர் சதீஷ் கீதா குமார். கதை பலமாக அமைந்தாலும், அதை கொண்டும் செல்லும் விதத்தில் இயக்குனர் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் குறிப்பாக பல இடங்களில் அடுத்தது என்ன என யூகிக்கும்படி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.