கான்ஜுரிங் கண்ணப்பன் ; விமர்சனம்


சதீஷ் ஒரு கேம் டிசைனர். வேலைக்காக பல இடங்களில் அலைந்து கொண்டிருக்கிறார். ஓய்வுபெற்ற தந்தை வி.டி.வி. கணேஷ், தாய் சரண்யா பொன்வண்ணன், யூடியூபர் மாமா சேகர் நமோ நாராயணன் ஆகியோrரை கொண்ட கலகலப்பான குடும்பம். ஒரு நாள் தன் வீட்டில் இருக்கும் யாரும் உபயோகிக்காத கிணற்றில் தண்ணீர் எடுக்க முற்படும் போது ஒரு ட்ரீம் கேட்சர் என்ற இறகுகள் கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்ட ஒரு பொம்மையுடன் கூடிய ஒரு கலைப்பொருளை எடுக்கிறார். அவர் அந்த மர்மமான பொருளில் இருக்கும் ஒரு இறகை பறிக்க அன்றிலிருந்து இரவில் தூங்கும் போது , இந்த சாதனம் கனவு உலகத்தில் அவரை 1930ல் இரண்டு பிரிட்டிஷ் பேய்களால் வேட்டையாடப்பட்ட ஒரு அரண்மனை மாளிகைக்கு கொண்டு செல்கிறது.

முதலில் அதை கனவாக சதீஷ் நினைக்க, மீண்டும் அதேபோல் கனவு வருகிறது. கனவில் நடந்தது தூங்கி எழுந்ததும் அதை நிஜத்திலும் உணரத்தொடங்குகிறார். விபரீதம் நடப்பதை தொடர்ந்து, (எக்ஸார்சிஸ்ட்) பேய் ஓட்டும் நாசரின் உதவியை நாடுகிறார். இதற்குள் சதீஷின் மொத்த குடும்பமும் அந்த பேய் அரண்மனையில் சிக்கிக் கொள்கிறது. அதிலிருந்து அவர்கள் வெளியேறினார்களா, இல்லையா? என்பதே காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் கதை.

கண்ணப்பன் என்கிற கேபியாக நல்ல நகைச்சுவை நடிகரான சதீஷ், தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பயம், காமெடி கலந்து பொறுப்புடன் தனதுகதாபாத்திரத்தின் உணர்வுகளை சதீஷ் அவற்றை திறம்பட சித்தரித்துள்ளார்.

ரெஜினா கசாண்ட்ரா நீண்ட நாட்களுக்குப் பிறகு பேய்களை விரட்டும் மந்திரம் தெரிந்த டார்க் டேவ்ஸ் என்ற கதாபத்திரத்தில் அதற்கேற்ற வித்தியாசமான டாட்டூ அலங்கார கெட்டப்புடன் கொஞ்ச நேரம் பங்களிப்பை கொடுத்தாலும் மிரட்டலுடன் தைரியம் மிகுந்த பெண்ணாக அதிர வைத்துள்ளார்.

வி.டி.வி கணேஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த்ராஜ், சந்திரசேகர் கோனேரு, நமோ நாராயணன் மற்றும் சர்வதேச நடிகர்கள் எல்லி அவ்ராம், ஜேசன் ஷா மற்றும் பெனடிக்ட் காரெட் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை பயமுறுத்தும் சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையோடு வழங்கியுள்ளனர்.

யுவாவின் ஒளிப்பதிவு ஒரு பேய்கள் வாழும் கனவு உலகத்தை காட்டி விடுகிறது. யுவன் இசை ஓகே. ஆனால் சவுண்ட் எஃபெக்ட்ஸ் தான் காதுகளை பதம் பார்க்கிறது.

ஒவ்வொரு திகில் படத்திலும், கதாபாத்திரங்கள் நிஜ உலகில் ஒரு இடத்தில் சிக்கிக் கொள்ளும், ஆனால் இங்கே, அவர்கள் ஒரு கனவு உலகில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த கற்பனை கலந்த திகில் அனுபவத்தை நகைச்சுவை கலந்து கொடுத்து இதை ரசிக்கும்படியாகவே உருவாக்கியுள்ளார் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்