கட்டில் ; விமர்சனம்

வீட்டில் நாம் புழங்கும் பொருட்கள் சிலவற்றின் மீது இனம்புரியாத பற்றுதல் உருவாகிவிடுவது சகஜம். அப்படி, அந்த குடும்பத்தின் கடைக்குட்டி பிள்ளை கணேசனுக்கு தங்கள் வீட்டில் பல வருடங்களாக இருந்துவரும் கட்டில் மீது பிரியம் உருவாகிவிடுகிறது.

கணேஷ் பாபு, தனது மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் அம்மா கீதா கைலாசத்துடன் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். வெளிநாட்டில் குடியேறிவிட்ட அவரது சகோதரனும், சகோதரியும் வீட்டை விற்க முடிவு செய்கிறார்கள். அதில் உடன்பாடில்லை என்றாலும் வேறு வழியின்றி கணேஷ் பாபு சம்மதிக்கிறார்.

அதே சமயம், அந்த வீட்டில் இருக்கும் பழங்காலத்து கட்டிலுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிவிட்ட கணேஷ் பாபு, அதை விட்டுச் செல்ல மனமில்லாமல் எடுத்துச் செல்ல முடிவு செய்கிறார். ஆனால், அது அவரது வாழ்க்கையில் சில சிக்கல்களை உண்டு பண்ணுவதோடு, கட்டிலை பிரிய வேண்டிய சூழலையும் உருவாக்க, அந்த கட்டில் உடனான அவரது உணர்வுப்பூர்வமான பயணம் தொடர்ந்ததா?, இல்லையா? என்பதே படம்.

நாயகனாக நடித்திருக்கும் ஈ.வி.கணேஷ்பாபு தாத்தா அய்யாறு, தந்தை இளங்கோவன், மகன் கணேசன் என மூன்று தோற்றங்களில், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் கடினமாக உழைத்து உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் பெண் செய்யும் தியாகம், வலிகள் ஏராளம். அதை தனலெட்சுமியாக மனதை தொடும் கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே வாழ்ந்துள்ளார்.

நாயகனுக்கு அம்மாவாக வருகிற கீதா கைலாசம் நேர்த்தியான நடிப்பைக் கொடுக்க, பழைய பொருட்கள் சேகரிப்பாளராக இந்திரா சௌந்தர்ராஜன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்.

செம்மலர் அன்னம், சிறுவன் நித்தீஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவருடைய கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருப்பதோடு, கதையின் கனத்தை ரசிகர்களுக்குள் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘கோயிலிலே குடியிருந்தோம்’ பாடல் மனதுக்கு இதம் சேர்க்கிறது.

இந்த கதையினை எடிட்டர் லெனின் எழுத ஈ.வி.கணேஷ் பாபு இயக்கியுள்ளார்.கட்டிலைச் சுற்றியே கதைக்களம் முழுவதையும் உருவாக்கி உயிரற்ற பொருளை மையமாக வைத்து உயிருள்ள உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளை நிறைத்து மூன்று தலைமுறைகளை இணைத்து அதில் காதல், சோகம், பாசம், ஆசை, சென்டிமெண்ட் கலந்து மெதுவாக செல்லும் கதைக்களத்தில் நிறைவாக குடும்பங்கள் கொண்டாடும் படத்தை கொடுத்து பாரம்பர்யத்தை மறக்காதீர்கள் என்று சொல்லியுள்ளார் ஈ.வி.கணேஷ்பாபு.