இமெயில் ; விமர்சனம்


நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால், தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கும் ராகினி திவேதி, அதை எப்படி செய்கிறார்?, அந்த பிரச்சனை என்ன?, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் ‘இ-மெயில்.

தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி செய்த இணையவெளியில், பயன்கள் உள்ள அதே அளவு ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மையக்கதையாகக் கொண்டு உருவாகி வெளியாகியிருக்கிறது இ மெயில் திரைப்படம்.

நாயகனாக நடித்திருக்கிறார் முருகா அசோக்.காதல்காட்சிகளில் நெருக்கம் காட்டுகிறார். மனைவிக்கு ஆபத்து என்றதும் உடனே களமிறங்கும் வேகத்தில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் குறைவான பங்கு இருந்தாலும் அதில் முழுநிறைவுடன் பணியாற்றியிருக்கிறார்.

கதாநாயகி ராகினிதிவேதிக்கு கதையைத் தாங்கிப் பிடிக்கும் கனமான வேடம்.காதல் காட்சிகள் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளும் அவருக்கு இருக்கின்றன. இரண்டையும் ரசித்துச் செய்திருக்கிறார்.

கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜுபினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதையை, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்லும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்,ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் க்ரைம் கலந்து சுவாரஸ்யமாக அளித்துள்ளார்