லவ்வர் ; விமர்சனம்


தனக்கு பிடித்த தொழிலை செய்ய பணமில்லாமலும், தன்னுடைய வீட்டின் சூழ்நிலையாலும், ஒரு இறுக்கமான மன நிலையில் இருந்து வருகிறார். அதோடு நண்பர்களுடன் சேர்ந்து குடித்தும் வருகிறார். இன்னொரு பக்கம் மணிகண்டனும், ஸ்ரீ கௌரி ப்ரியாவும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மனதளவிலும், உடலளவிலும் நெருக்கமாக இருந்து வரும் காதலர்கள். இவர் மீது மணிகண்டனுக்கு ஓவர் பொஸஸிவ்னஸ் இதனால், இவர்களுக்குள் அவ்வப்போது சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் மணிகண்டனிடமிருந்து விடுபட விரும்புகிறார், ஸ்ரீகௌரி ப்ரியா. ஆனால், மணிகண்டன் அதற்கு மறுக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் லவ்வர் படத்தின் கதை.

நாயகன் அருணாக மணிகண்டன் ஈகோ – ஆணாதிக்கம் பிடித்த இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். “அவ என் காதலி இல்லே.. என் பொண்டாட்டி… அவ எப்படி இன்னொருத்தன்கூட அதிக நேரம் பேசலாம்” என்றெல்லாம் அவர் வெடிக்கும்போது, அச்சு அசலாக ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துகிறார்.

நாயகி திவ்யாவாக, ஸ்ரீகெளரி பிரியா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். காதலன் மீது வைக்கும் அன்பு, அதே நேரம் அவனது அடக்குமுறை பிடிக்காத நிலை, அவனை நினைத்து தவிப்பது என பரிதாபத்துக்குரிய இளம்பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார். ஒருகட்டத்தில் மணிகண்டனின் தாயிடம் என்னால முடியலம்மா… என்று சொல்லி அழும் இடத்தில் நம் கண்களை பனிய வைக்கிறார்.

மணிகண்டனின் அப்பாவாக வரும் சரவணன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார். மணிகண்டனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் இயல்பான நடிப்பால் காட்சிகளுக்கு உயிர் கூட்டுகிறார். மணிகண்டனின் நண்பராக கடைசி வரை வரும் கண்ணா ரவி, திவ்யாவின் தோழர்கள் மற்றும் தோழிகளாக நடித்திருப்பவர்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

ஷான் ரோல்டரின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. மேலும் சில காட்சிகளில் அடுத்த என்ன நடக்குமோ என்கின்ற உணர்வையும் அது பார்வையாளர்களுக்கு அதீதமாகக் கடத்துகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என்றே சொல்லாம்

படம் முழுக்க அளவுக்கு அதிகமாக புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன. இருந்தாலும் 2k கிட்ஸ்களின் மைண்ட்செட்டை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சிறிது நேரம் மெதுவாக செல்கிறது. காதலிக்கும் இன்றைய ஆண் பெண்களின் உளவியலை அறிந்து படமாக்கியுள்ள இயக்குநர் பிரபு ராம் வியாஸ் திரைக்கதையில் இன்னும்கவனம் செலுத்தியிருந்தால் இந்த லவ்வர் அனைவராலும் ரசிக்கப்பட்டிருப்பான்.